Home /News /tamil-nadu /

2 குழந்தைகளை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்.. புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்

2 குழந்தைகளை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்.. புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்

தனது 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்

தனது 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்

Pudukottai : கணவனின் குடி பழக்கத்தால் ஏற்படும் குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மன விரக்தியில் தனது 2 குழந்தைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் தானும் தற்கொலை செய்ய முயன்றநிலையில், தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே, கணவனின் குடி பழக்கத்தால் ஏற்பட்ட குடும்ப பிரச்னையை நினைத்து மன விரக்தியில் தனது 2 குழந்தைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக கழுத்தை நெறித்து கொலை செய்து, தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்ற தாயை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பர்கோவில்பட்டியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் பொன்னடைக்கண் (28).  இவர் பொள்ளாச்சியில் உள்ள தேங்காய் உரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  இவருக்கும் கருப்புக்குடிப்பட்டியில்  சின்னுப்பிள்ளை என்பவரது மகள் பஞ்சவர்ணம் (24) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இருவரும் கருப்பர்கோவில்பட்டியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 வயதில் ஜெகதீசன் என்ற ஆண்குழந்தையும்  தக்‌ஷியா என்ற 8 மாத பெண் குழந்தையும் உள்ளது.

    இந்நிலையில், பஞ்சவர்ணம்  மற்றும் அவரது கணவர் பொன்னடைக்கணுக்கும் வீடு கட்டுவதிலும் பொன்னடைக்கனின் குடிப்பழக்கத்தினாலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவ்வப்போது குடும்ப பிரச்சினை நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் பொன்னடைகண் அவர் பணி செய்யும் கோயம்புத்தூரிலிருந்து சமீபத்தில் ஊர் திருவிழாவை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

    பின்னர், கருப்புக்குடிப்பட்டியில் உள்ள பஞ்சவர்ணத்தின் தாயார் வீட்டில் பஞ்சவர்ணமும் பொன்னடைக்கணும் குடும்ப பிரச்சினை குறித்து சமரசமாக பேசிவிட்டு கருப்பர்கோவில்பட்டிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் பொன்னடைக்கண் கருப்பர்கோவில்பட்டியில் உள்ள அவரது வீட்டிலிருந்து வெளியில் சென்ற நேரத்தை பயன்படுத்தி வீட்டிலிருந்த பஞ்சவர்ணம் திடீரென கணவனின் குடி பழக்கத்தால் ஏற்படும் குடும்ப பிரச்சனையை நினைத்து மன விரக்தியில் தனது 2 குழந்தைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக கழுத்தை நெரித்து கொடூரமான கொலை செய்துவிட்டு, கொலை செய்த தகவலை தனது வீட்டின் அருகே உள்ள சின்னு என்பவரின் செல்போனை வாங்கி தன் தாயாரிடம் குழந்தைகளை கொலை செய்துவிட்டதாக  தெரிவித்துள்ளார்.

    பின்பு, பஞ்சவர்ணமும் தற்கொலை செய்யும் நோக்கத்தோடு வீட்டை விட்டு கிளம்பிய நிலையில், கருப்புக்குடிப்பட்டியில் உள்ள பஞ்சவர்ணத்தின் தாயார் சின்னுபிள்ளை உடனடியாக பஞ்சவர்ணத்தின் வீட்டில் வந்து பார்த்தபோது இரண்டு குழந்தையும் இறந்து கிடந்தனர். இதனையடுத்து சின்னுப்பிள்ளை கதறி அழும் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடிய நிலையில் தற்கொலை செய்து கொள்வதாக கூறிச்சென்ற பஞ்சவர்ணத்தை கிராமத்தார்கள் தடுத்து  நிறுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  விசாரணை செய்தனர். அப்போது பஞ்சவர்ணம் தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக தான் பெற்ற 2 பிள்ளைகளை கழுத்தை நெரித்து கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

    Must Read : அண்ணாமலை கிரிமினல்களை எல்லாம் பிடித்து பாஜகவில் சேர்த்துக் கொண்டிருக்கிறார் - டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம்

    இதையடுத்து உயிரிழந்த 2 குழந்தைகளின் சடலங்களை கைப்பற்றிய போலீசார், வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்ட பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த தாய் பஞ்சவர்ணத்தை கைது செய்து அவரது கணவர் பொன்னடைக்கணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ர.ரியாஸ், புதுக்கோட்டை




    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Suresh V
    First published:

    Tags: Murder, Pudukkottai

    அடுத்த செய்தி