திருவண்ணாமலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் வெறித்தனமாக நடத்திய தாக்குதலால் பரபரப்பு... போலீசார் உள்ளிட்ட பலருக்கு படுகாயம்...

திருவண்ணாமலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் வெறித்தனமாக நடத்திய தாக்குதலால் பரபரப்பு... போலீசார் உள்ளிட்ட பலருக்கு படுகாயம்...

மாதிரி படம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட நபர், திடீரென ஆவேசமடைந்து ஹோட்டல் கண்ணாடி, சாப்பாட்டு மேஜைகளை அடித்து நொறுக்கினார். அவர் கட்டையால் தாக்கியதில் போலீசார் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர்.

  • Share this:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரில் ஒரு ஹோட்டல் உள்ளது. அதில், சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் ஒரு நபர் சாப்பிட வந்தார். சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் திடீரென தண்ணீர் ஜக்கை எடுத்து வீசியுள்ளார். பின்னர் மளமளவென சமையலறைக்குள் சென்று அங்குள்ள பாத்திரங்களை கவிழ்த்து விட்டு ரகளையில் ஈடுபட்டார். அவரது நடவடிக்கைகளால் பீதியடைந்த வாடிக்கையாளர்கள் ஹோட்டலை விட்டு வெளியே ஓடி தப்பினர்.

அந்த நபர் சமையலறையில் இருந்து ஒரு ஜல்லிக் கரண்டியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து சாப்பாட்டு மேஜைகளையும் இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கினார். அதைப் பார்த்த பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு அங்கு கிடந்த கட்டைகளை எடுத்து வீசத் தொடங்கினர்.

பதிலுக்கு பொதுமக்கள் மற்றும் போலீசாரை அந்த நபர் தாக்கியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பின்னர் ஒருவழியாக பொதுமக்கள் அவரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். அதில் அவரது கழுத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

போலீசார் அவரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதற்கட்ட விசாரணையில், பொதுமக்களைத் தாக்கியவர் புதுப்பாளையம் அருகே உள்ள வீரணந்தல் கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான செல்வக்குமார் என்பது தெரியவந்தது.

மனநலம் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக சில ஆண்டுகளாக சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட நபர் சாப்பிடச் சென்ற ஹோட்டலில் திடீரென பொருட்களையும் வாகனங்களையும் அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க...தமிழக அரசியலில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஏற்றமும்... இறக்கமும்...உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: