Home /News /tamil-nadu /

மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை -மயிலாடுதுறையில் சோகம்

மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை -மயிலாடுதுறையில் சோகம்

கணவன் தற்கொலை

கணவன் தற்கொலை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மனைவி இறந்த சோகத்தில் இருந்த கணவனும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமார் (50). இவருக்கும் பத்மா (வயது45) என்ற பெண்ணிற்கும் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குமார் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 5 மகன்கள், ஒரு மகள் உள்ளார்.

தற்பொழுது ஒரு மகனுக்கு மட்டும் திருமணமாகி உள்ளது. இந்நிலையில் பத்மா கேன்சர் நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் அவருக்கு உடல் நலம் சீராகவில்லை. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பத்மா சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துள்ளார். மனைவி இறந்ததில் இருந்தே குமார் சோகமாக இருந்து வந்துள்ளார்.

மனைவியின் பிரிவை தாங்கி கொள்ள முடியாமல் தனது உறவினர்களிடம் மனைவி சென்ற இடத்துக்கே தானும் செல்வதாக குமார் உருக்கமாக பேசி வந்துள்ளார். உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறியும், மீண்டும், மீண்டும் மனைவியை பற்றிய சிந்தனையிலேயே அவர் மூழ்கி, மிகுந்த மன வேதனையுடன் இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த அவர் திடீரென விஷம் குடித்துள்ளார். இதனை அறிந்த மகன்கள் மற்றும் உறவினர்கள் அவரை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த போது  ஏற்கனவே அவர் இறந்தது தெரியவந்தது.


இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்காடு போலீசார் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த சோகத்தில் கணவன்  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Published by:Karthick S
First published:

அடுத்த செய்தி