ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் தோல்பன் வயது 39, இவருடைய மனைவி மிகி இவருக்கு வயது 36. இவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக இஸ்ரேல், இங்கிலாந்து, நியூசிலாந்து, துபாய் உள்ளிட்ட 91 நாடுகளை சுற்றி வந்தனர். அவர்கள் தற்போது இந்தியா வந்துள்ளனர்.
இந்த சுற்றுலா தம்பதி சில வாரங்களுக்கு முன்னர் கப்பல் மூலம் தங்களது நவீன வாகனத்துடன் மும்பை துறைமுகத்திற்கு வந்தனர். பின்னர், அங்கிருந்து கர்நாடகா, கேரளா வழியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் வந்தனர். அவர்கள் மாமல்லபுரம் கடற்கரை கோவில் நுழைவு வாயிலில் தங்களின் வாகனத்தை நிறுத்திவிட்டு சுற்றுலா சென்றபோது, அங்கு வந்த சுற்றுலா பயணிகள் சொகுசு வாகனத்தை சூழ்ந்து கொண்டு மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இந்த நவீன சொகுசு வாகனம் குளிர் சாதன வசதியுடன் கூடிய படுக்கை வசதி, சமையல் அறை, குளியலறை உள்ளிட்டவற்றைக் கொண்டது. மேலும், மலை பிரதேசம், கரடு முரடான பாதைகளில் பயணிக்கும் வகையில் சிறப்பம்சம் பொருந்திய டயர்கள் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
அத்துடன், இந்த வாகனத்தில் சோலார் வசதி பொருத்தப்பட்டு இருப்பதால், அதன் மூலம் மின்சாரம் பெற்று மின்விசிறி, மின் விளக்கு, ஏசி உள்ளிட்டவை பயன்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தம்பதி, மாமல்லபுரத்தைச் சுற்றி பார்த்துவிட்டு, இந்த வாகனத்தில் வட இந்திய மாநிலங்களான மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் குஜராத் உள்ளிட்ட இடங்களுக்கும் செல்ல இருப்பதாக அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
Must Read : மு.க.ஸ்டாலினின் உங்களில் ஒருவன் சுயசரிதை: ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்
மேலும், இப்படி சுற்றுலா செல்லும்போது பணம் குறைவாக இருந்தால், மீண்டும் ஜெர்மன் சென்று பணம் சம்பாதித்து அதன் பின்னர் தங்கள் பயணத்தை தொடங்குவோம் எனவும் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.