சென்னையில் மது வாங்கித் தரச்சொல்லி நச்சரித்த நண்பனுக்கு சரமாரி வெட்டு..

Youtube Video

சென்னை ஆவடியில், நண்பர்களைப் பார்க்கும் போதெல்லாம் மது வாங்கித் தரச் சொல்லி நச்சரித்த இளைஞரை அவரது நண்பர்களே ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  20 வயதான தயாளனை அவரது நண்பர்களே ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்ய முயன்றுள்ளனர்.  மது வாங்கித் தரச் சொல்லி அடிக்கடி நச்சரித்ததால் படுகொலை செய்ய முயன்றதாக சிக்கிய நண்பர்கள் கூறியுள்ளனர். நண்பர்களிடையே நடந்தது என்ன?

  ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதான தயாளன். இவர் சென்னையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு, வீட்டருகே உள்ள பழைய நூலகம் கட்டிடம் அருகே தயாளன் நின்று கொண்டிருந்த போது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் தயாளனை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளது.

  இதில் தயாளனுக்கு இடது கழுத்து மற்றும் இடது கை மணிக்கட்டு பகுதியில் பலமாக அரிவாள் வெட்டு விழுந்தது. தயாளனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டதால் அந்தக் கும்பல் தப்பியோடியது. உடனடியாக தயாளன் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

  புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த ஆவடி போலீசார் தயாளனின் நண்பர்களான தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த 22 வயதான கோகுல்நாத், அஜித்குமார், அஜீஸ், முத்தாபுதுப்பேட்டை பகுதியை சேர்ந்த , 23 வயதான வசந்தவேலன் ஆகியோரை கைது செய்தனர்.

  விசாரணையில், தயாளன் அடிக்கடி நேரிலும் செல்போனிலும் தொடர்பு கொண்டு, மது வாங்கித் தரும்படியும் அல்லது குடிப்பதற்கு பணமாவது தரும்படியும் நச்சரித்தது தெரியவந்துள்ளது.

  தீபாவளியன்று கூட தங்களை வழிமறித்துப் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்து திட்டியதாகவும் அப்போதும் தயாளன் தனது நச்சரிப்பை கைவிடவில்லை என்றும் நண்பர்கள் கூறியுள்ளனர். அதனால் தான் அவரை ஓட ஓட விரட்டி வெட்டியதாகவும் குற்றவாளிகள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.

  மேலும் படிக்க...7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு இரட்டை மரண தண்டனை... புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

  கைதானோர் மீது கொலை முயற்சி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மது வாங்கித் தரச் சொல்லி நச்சரித்த நண்பனை சக நண்பர்களே ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: