கன்னியாகுமரி மாவட்டம் மருதூர்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரான்சிஸ் - அமலபுஷ்பம் தம்பதி. இவர்களுக்கு 42-வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், 7-பெண் குழந்தைகளுடன் தங்களுக்கு சொந்தமான குடிசை வீடு ஒன்றில் வாழ்ந்து வந்தனர். சாலையில் இருந்து சுமார் 200-மீட்டர் தூரத்திற்கு ஒற்றையடி பாதையில் வீட்டிற்கு பயணித்து செல்ல வேண்டிய சூழலில் அச்சத்துடனே மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். அதே இடத்தில் 30-வருடங்களுக்கு முன்பு சிறுக சிறுக சம்பாதித்து சேர்த்த பணத்தில் சிறிய வீடு ஒன்றை கட்டி குடி புகுந்தனர்.
சாலைக்கும் வீட்டிற்கும் இடையே உள்ள தொலைவை காரணம் காட்டி அந்த வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க இயலாது என அதிகாரிகள் மறுத்து விட்டதாக கூறுகிறார் அமலபுஷ்பம்... ஆனாலும் பஞ்சாயத்து அலுவலகம், ஆட்சியர் அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், என மின் இணைப்புக்காக தளராமல் ஏறி இறங்கிய அமலபுஷ்பத்திற்கு திசையெல்லாம் இருட்டாகவே இருந்திருக்கிறது.
ஒக்கி புயலின் போது நேரடியாக வீட்டை ஆய்வு செய்த அப்போதைய மாவட்ட ஆட்சி தலைவர் சஜ்ஜன் சிங் சவான் உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்து சென்றார். ஆனால் அது நடக்கவில்லை.
7-பெண் பிள்ளைகளும் வெவ்வேறு துறைகளில் பட்டம் பெற்று பட்டதாரி ஆன நிலையில், தற்போது 4-பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் பிரான்சிஸ். தனது மனைவி, மனைவியின் தாயார் மற்றும் இளைய மகள்கள் 3 பேருடன் வசித்து வருகிறார். மூன்று மகள்களும் மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் படித்து போட்டி தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
மேலும் படிக்க...விளாத்திகுளம் அருகே செல்போன் தராததால் 6-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
ஒரு மணி நேரம் கூட மின் இணைப்பு இல்லாமல் வாழ முடியாத நவீன உலகில் 40 ஆண்டுகளாக இருளில் மூழ்கி தவித்து வரும் இந்த குடும்பத்திற்கு ஒளி வீச மின் மிகை மாநிலம் என்று கூறும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன் வருமா...
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்