கொரோனா ஊரடங்கில் ரேசனில் கூடுதல் அரசி வழங்கியது, எல்.இ.டி பல்புகள் வாங்கியதில் ஊழல்- முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு!

கொரோனா ஊரடங்கில் ரேசனில் கூடுதல் அரசி வழங்கியது, எல்.இ.டி பல்புகள் வாங்கியதில் ஊழல்- முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

2018 அரசானையை எதிர்த்து புதிய மனு தாக்கல் செய்ய உள்ளதாக மனுதாரர் தெரிவித்ததையடுத்து வழக்கு விசாரணை ஜனவரி 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா ஊரடங்கின் போது ரேசனில் கூடுதல் அரசி வழங்கியது மற்றும் எல்.இ.டி பல்புகள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறி முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மக்கள் வாழ்வாதாரத்தை இழந்ததால், ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ ரேசன் அரிசி கூடுதலாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்திய உணவு கழகம் மூலமாக அரிசியை அனுப்பி வைத்தது. மத்திய அரசு உத்தரவுப்படி குடும்ப அட்டை உறுப்பினர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்குவதற்கு பதில், குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி மட்டும் வழங்கியதாகவும், மீதமுள்ள அரிசி அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் மூலம் நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி ரேஷன் அரிசியை பாலீஷ் செய்து ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.

கூடுதல் அரிசி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மத்திய அரசிடம் பெற்ற ரேசன் அரிசியை பொதுமக்களுக்கு வழங்காமல் முறைகேடாக விற்ற விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும், அமைச்சர் காமராஜ் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை கோரி கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு துறை இயக்குனரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.

Also read... அரசுப் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து.. அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..

தனது புகாரில் போதிய முகாந்திரம் உள்ளதால் முதல்வர் மற்றும் அமைச்சர் காமராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அதேபோல், எல்.இ.டி பல்பு வாங்கியதில் சுமார் 500 கோடி வரை ஊழல் செய்ததாக அமைச்சர் வேலுமனிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பொது ஊழியர்களுக்கு எதிரான புகார் மீது விசாரணை நடத்த பொதுத்துறை செயலாளர் அனுமதி பெற அனுப்பி வைக்க வேண்டும் என 2018 ஆம் அரசானை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், பொதுத்துறை செயலாளர் அமைச்சரவையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக செயல்பட மாட்டார் என அப்பாவு தரப்பில் வாதிடப்பட்டது. எனவே முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு பதிய ஆளுனரின் ஒப்புதலைப் பெற லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், 2018 அரசானையை எதிர்த்து புதிய மனு தாக்கல் செய்ய உள்ளதாக மனுதாரர் தெரிவித்ததையடுத்து வழக்கு விசாரணை ஜனவரி 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: