பப்ஜி விளையாட்டிற்கு அடிமை.. பாட்டியைக் கொன்ற பேரன் கைது...!

  • News18
  • Last Updated: February 12, 2020, 10:58 AM IST
  • Share this:
பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான 20 வயது இளைஞர், வீட்டு வாடகைக்காக சொந்த பாட்டியைக் கொலை செய்த வழக்கில் கைதாகியுள்ளார்.

சென்னை ஆவடி அடுத்த கண்ணபாளையத்தைச் சேர்ந்தவர் 70 வயதான மல்லிகா. கடந்த 7-ம் தேதி பிற்பகலில் வீட்டில் சடலமாகக் கிடந்தார். சடலத்தை மீட்ட போலீசார் கொலை பற்றி விசாரித்தனர். விசாரணையில், மூதாட்டி மல்லிகாவின் சகோதரியின் பேரன் 20 வயதான கோகுல் மற்றும் அவரது நண்பர் 17 வயது சிறுவன் ஆகியோர் சிக்கினர்.

கோகுல் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மூதாட்டி மல்லிகாவின் சகோதரியின் மகள் பத்மாவதி, கணவரை இழந்த இவர் தனது மகன் கோகுல் மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மகளோடு அயனாவரத்தில் வசித்து வருகிறார்.


வெல்டிங் பிரிவில் டிப்ளமோ படித்த கோகுல், சிறுசிறு வேலைகள் பார்த்து வருமானம் ஈட்டி வந்தார். எழுந்து நடமாட முடியாத அளவுக்கு பத்மாவதி நோய்வாய்ப்பட்டிருப்பதால் கோகுலை நம்பித்தான் குடும்பம் நடந்து வந்தது.

ஆனால் கோகுலோ பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி, வேலைகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே பொழுதைக் கழித்து வந்தார். ஒருகட்டத்தில் வீட்டிற்கு வாடகை செலுத்த முடியாமல் போகவே கடந்த 6-ம் தேதி வீட்டு உரிமையாளர், பத்மாவதியின் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை வெளியே எடுத்து வைத்தார்.

அவரை சமாதானப்படுத்தி அனுப்பிய பத்மாவதி, கோகுலிடம் நடந்ததைத் தெரிவித்துள்ளார். அப்போதுதான் கோகுலுக்கு தனது பாட்டி மல்லிகாவின் நினைவு வந்துள்ளது. கணவர் ராணுவத்தில் பணியாற்றி மறைந்ததால் மாதம் 18 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வாங்கி வந்தார் மல்லிகா.வீட்டருகே இருந்த இடத்தில் சிறிய மாரியம்மன் கோவிலைக் கட்டி அதை நிர்வகித்து வந்தார். குழந்தைகள் இல்லாததால் வரும் வருமானத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மதுஅருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

கடந்த 6-ம் தேதி மல்லிகாவிடம் பணம் வாங்க வேண்டும் இல்லை என்றால் அவரைக் கொன்று விட வேண்டும் என்ற முடிவெடுத்தார் கோகுல். நண்பன் 17 வயது சிறுவனின் வாகனத்தில் நள்ளிரவு 12 மணியளவில் மல்லிகா வீட்டிற்கு சென்றார் கோகுல், அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

கோகுல் பாட்டியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். மதுபோதையில் இருந்த மல்லிகா, பணம் தர மறுக்கவே ஆத்திரத்தில் அவரைக் கீழே தள்ளியுள்ளார் கோகுல். போதையில் இருந்ததாலும், தலையில் அடிபட்டதாலும் மல்லிகா அங்கேயே உயிரிழந்தார்.

அவரது பீரோவை திறந்த கோகுல் அதில் இருந்த 7 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு நண்பனுடன் மாயமானார். மறுநாள், அயனாவரத்தில் உள்ள அடகுக் கடை ஒன்றில் நகைகளை அடகு வைத்துள்ளார் கோகுல். இந்தத் தகவலை அடகுக்கடைக்காரர் போலீசாரிடம் தெரிவித்ததை அடுத்து, கோகுல் சிக்கியுள்ளார்.

தனது மகன் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையானதே இந்த அவலத்திற்கு காரணம் என்கிறார் அவரது தாய் பத்மாவதி. எந்த விளையாட்டாக இருந்தாலும், அதிக நேரம் விளையாடு அனுமதிக்க கூடாது என்றும், வாரிசுகளின் செயல்பாடுகளை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என்று மனநல மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Also see...


First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading