புத்துணர்வு நலவாழ்வு முகாம்: கோயில்கள், மடங்களுக்கு சொந்தமான யானைகள் பங்கேற்பு

கோயில் யானைகள்

கோவை தேக்கம்பட்டியில் புத்துணர்வு நலவாழ்வு முகாமுக்கு வந்துள்ள கோயில் யானைகள் உற்சாகமடைந்துள்ளன. யானைகளின் உடல் எடை பரிசோதனை செய்யப்பட்டு அதன் தேவைக்கு ஏற்ப உணவுகள் வழங்கப்படுகின்றன.

 • Share this:


  தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களுக்கு சொந்தமான வளர்ப்பு யானைகளுக்கு ஆண்டு தோறும் நலவாழ்வு முகாம் நடத்தப்படுகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள தேக்கம்பட்டியில் புத்துணர்வு முகாம் திங்கட்கிழமை முதல் 48 நாட்களுக்கு நடைபெறுகிறது.

  இந்த முகாமில் உணவுக் கூடம், யானைகளுக்கான நடைபயிற்சி பாதை, குளிக்க வைக்கும் இடம் தயாராக உள்ளன. 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட முகாமிற்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  அதை சுற்றி தகரத்திலான தடுப்பு, சோலார் மின்வேலி, அணைந்து எரியும் வகையிலான மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், 7 இடங்களில் கோபுரம் அமைக்கப்பட்டு காட்டு யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

  நெல்லை மாவட்டம் நெல்லையப்பர் கோயில் யானையான காந்திமதி, முகாமுக்கு கிளம்புவதற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, பூஜை செய்யப்பட்டு லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

  இதேபோன்று, பழனி தண்டாயுதபாணி கோவில் யானை கஸ்தூரியும், பூஜை செய்யப்பட்டு சிறப்பு நல்வாழ்வு முகாமிற்கு லாரி மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

  மேலும், மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை, ஸ்ரீபெரும்புதூர் கோயில் யானை கோதை, காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உள்ள ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி கோயில் பிரணாம்பிகை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலின் ஜெயமால்யதா யானையும் புத்துணர்ச்சி முகாமில் பங்கேற்கின்றன

  கோவை பேரூர் கோவிலில் இருந்து கல்யாணி யானை முகாமிற்கு புறப்பட்ட போது, வேறு பாகனை மாற்றக் கோரி திமுக பிரமுகர் ஞானவேல் வாகனத்தின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டார். அதன் பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக யானை புறப்பட்டுச் சென்றது.

  மேலும் படிக்க... உ.பி. யோகி ஆட்சியைக் கலைக்கக் கோரிய மனு- உ.நீதிமன்றம் தள்ளுபடி

  தேக்கம்பட்டிக்கு முதலாவதாக திருச்செந்தூர் யானை தெய்வானை வந்தது. ஒன்றன் பின் ஒன்றாக மற்ற கோயில் யானைகள் வந்த நிலையில் வயதுக்கும், உயரத்திற்கும் ஏற்ற எடையில் அவை உள்ளனவா என பரிசோதிக்கப்பட்டன.

  நீண்ட நேரம் லாரியில் பயணித்து வந்ததால் முகாமில் நுழைந்ததும் யானைகளுக்கு அதற்கு பிடித்தமான பசுந்தீவங்கள் வழங்கப்பட்டன. தற்போது ஒன்பதாவது ஆண்டாக யானைகள் நலவாழ்வு முகாம் நடைபெறுகிறது.


  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: