Home /News /tamil-nadu /

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி துணை ராணுவப்படை வீரர்கள் சேலம் வருகை!

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி துணை ராணுவப்படை வீரர்கள் சேலம் வருகை!

துணை ராணுவப்படை வீரர்கள்

துணை ராணுவப்படை வீரர்கள்

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட பல லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

  • News18
  • Last Updated :
தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக துணை ராணுவப்படை வீரர்கள் 92 பேர் சேலம் வந்துள்ளனர்.

7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்திட, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளுக்கு துணை ராணுவப் படையினர் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் முழுவதும் 242 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதால், 92 துணை ராணுவப்படை வீரர்கள் முதற்கட்டமாக சேலம் வந்துசேர்ந்தனர். அவர்கள் அனைவரும் இரும்பாலையில் உள்ள மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தேர்தல் குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ரோகிணி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், வேட்பாளர்கள் 70 லட்சம் ரூபாய் வரை தான் செலவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதேபோன்று தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம் புதுவயல் பகுதியில் நடைபெற்ற சோதனையில், மினி வேனில் கொண்டுசெல்லப்பட்ட 13 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வாகன ஓட்டுனர் ஆதிகேசவன் என்பவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் மெதூரில், அதிமுக மற்றும் அமமுக பிரமுகர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மூன்று லட்ச ரூபாய் பணம், உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்ட பிறகு ஒப்படைக்கப்பட்டது. அதிமுக பிரமுகரான ரவீந்திரன் மற்றும் அவரது பேரனும், அமமுக நிர்வாகியுமான பரத் ஆகிய இருவரும், நிலத்தை பத்திரப்பதிவு செய்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது நடைபெற்ற சோதனையில், உரிய ஆவணங்களை காண்பிக்காததால், மூன்று லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், ஒன்றரை மணி நேரத்துக்கு பின், ஆவணங்களை கொண்டுவந்து காண்பித்து அவர்கள் பணத்தை திரும்பப்பெற்றனர்.

பண பறிமுதல் மட்டுமின்றி, கட்சி அடையாளங்களை மறைப்பதிலும் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டிவருகிறது. பிரசித்திப் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நுழைவு வாயிலில் போடப்பட்ட தாமரைக் கோலத்தை தேர்தல் ஆணையம் அழிக்க உத்தரவிட்டது.

அதற்கு பதிலாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் அந்த இடத்தில் ரங்கோலி கோலம் போடப்பட்டது.  தாமரைக் கோலத்தை அழிக்க வைத்ததற்கு, இந்துத்துவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

நெல்லை மாவட்டம், பணகுடியில், மினி லாரியில் கொண்டுசெல்லப்பட்ட இரண்டு லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு ராதாபுரம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில், சுஜன் என்பவர் தனது நண்பருக்கு கொடுக்க எடுத்து சென்றது தெரியவந்தது.

ஓசூர் தேன்கனிக்கோட்டை அருகே, முனிராஜ் என்பவர் ஓட்டிவந்த மாருதி காரில் இருந்து ஒரு லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டையில், காவல் துறையினர் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு அறிவுரைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தங்கும் விடுதி, திருமண மண்டபம், அச்சகம் மற்றும் பிளெக்ஸ் பிரிண்டிங் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். இதில் தேர்தல் காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

இதுபோல் தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையப் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Elections 2019, Lok Sabha Election 2019, Lok Sabha Key Constituency, North Central Tamil Nadu Lok Sabha Elections 2019, Salem S22p15, Tamil Nadu Lok Sabha Elections 2019

அடுத்த செய்தி