திருப்பூரில் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்தில் மறுநடவு செய்யப்பட்ட 90 வயதான அரசமரம் - பூ தூவி வழியனுப்பி வைத்த ஊர் மக்கள்

திருப்பூரில் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு 90 வயதான அரசமரம் மறு நடவு செய்யப்பட்டது. மரத்தை ஊர் பொதுமக்கள் பூ தூவி வழியனுப்பி வைத்தனர்.

திருப்பூரில் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு 90 வயதான அரசமரம் மறு நடவு செய்யப்பட்டது. மரத்தை ஊர் பொதுமக்கள் பூ தூவி வழியனுப்பி வைத்தனர்.

  • Share this:
திருப்பூர் - வாலிபாளையம் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில், 90 ஆண்டுகள் பழமையான அரச மரம் உள்ளது. இங்கு சமுதாயக்கூடம் கட்ட மாநகராட்சி முடிவு செய்ததைத் தொடர்ந்து, அவ்விடத்தில் இருந்த பழமையான மரத்தை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

திருப்பூரைச் சேர்ந்த இளங்கோ என்ற இயற்கை ஆர்வலர், திருப்பூர் - காளம்பாளையம் பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மாநகராட்சியின் இடத்தில் இருந்த பழமைவாய்ந்த மரத்தை அகற்றவிருப்பதை அறிந்த அவர், கிரீன் & கிளின் அமைப்பின் மூலம் அந்த அரசமரத்தை வேறு இடத்தில் மறு நடவு செய்ய அனுமதி பெற்றார்.



அதைத் தொடர்ந்து, வாலிபாளையம் பகுதியிலிருந்து 90 வயது பழமையான, 80 அடிக்கும் மேல் உயரம் கொண்ட, 15 டன் எடை அளவுள்ள அரசமரம் இரண்டு ராட்சத கிரேன்கள் மூலம் வேருடன் பெயர்க்கப்பட்டு, ராட்சத டிரக் வாகனத்தில் ஏற்றபட்டது. முன்னதாக, அரசமரத்தின் கிளைகள் வெட்டப்பட்டன. வேர்கள் காயமடையாதவாறு சுற்றிலும் குழி தோண்டப்பட்டது. மரத்தின் காயமடைந்த பகுதிகள் சாணம் கொண்டு பூசப்பட்டன. பின்னர், ராட்சத டிரக்கில் எடுத்துச் செல்லப்பட்ட அந்த மரத்துக்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பூஜை செய்து, மலர் தூவி வழியனுப்பி வைத்தனர்.

Also read: முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரோஜாப்பூ - அன்பை வெளிப்படுத்தி கொரோனா விழிப்புணர்வு வழங்கிய வேலூர் காவல்துறை

டிரக் மூலம் காளம்பாளையம் பறவைகள் சரணாலயம் அமையவுள்ள பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட அரச மரம், அங்கு நம்மாழ்வார் முறைப்படி கரும்பு சர்க்கரை, நாட்டுமாடு கோமியம், சாணம் ஆகியவை கலந்த அமிர்தகரைசல், வேப்ப புண்ணாக்கு கரைசல், தென்னைநார் ஆகியவை இடப்பட்டு, ஒரு வாரத்திற்கு முன்னதாக வெட்டப்பட்டிருந்த குழியில் கிரேன்களின் உதவியுடன் வெற்றிகரமாக மறுநடவு செய்யப்பட்டது. பின்னர், மீண்டும் அமிர்தகரைசல், வேப்ப புண்ணாக்கு கரைசல், தென்னைநார் ஆகியவை இடப்பட்டு மண்ணைக் கொண்டு மூடப்பட்டது.
Published by:Rizwan
First published: