சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் 85 பேருக்கு கொரோனா பாதிப்பு - 10 நாள்களுக்கு நிகழ்ச்சி நடத்த தடை
சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் 85 பேருக்கு கொரோனா பாதிப்பு - 10 நாள்களுக்கு நிகழ்ச்சி நடத்த தடை
கோப்பு படம்
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர தனியார் ஓட்டலில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பத்து நாட்களுக்கு நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் இருந்த கொரோனா பாதிப்பு தீவிரம் தற்போது குறைந்துள்ளது. தற்போது ஒரு நாளைக்கு 1000-க்கும் குறைவானர்களுக்கே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இருப்பினும், பிரிட்டனில் பரவிவரும் உருமாறிய கொரோனா தமிழகத்தில் பரவாமல் இருப்பதற்காக தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்தநிலையில், சென்னை கிண்டியிலுள்ள ஐ டி சி கிராண்ட் சோழா ஹோட்டலில் 85 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், அந்த ஹோட்டலில் 10 நாள்களுக்கு நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள 25 நட்சத்திர விடுதிகளில் சென்னை மாநகராட்சி கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறது. அனைத்து ஊழியர்களுக்கும் ஞாயிற்றுகிழமைக்குள் பரிசோதனை செய்து முடிக்கப்படும்.
கிண்டியில் உள்ள ஐ டி சி கிராண்ட் சோழா ஓட்டலில் உள்ள சமையல் கலைஞர் ஒருவருக்கு டிசம்பர் இரண்டாம் வாரத்தில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், உடன் பணிபுரிந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. சாசுரேஷன் டெஸ்ட் ( saturation test) எனப்படும் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள 100% பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 609 மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் 85 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பணிபுரிபவர்கள், ஓட்டலுக்கு வந்தவர்கள், பணிபுரிபவர்கள் தங்கியிருக்கும் பகுதியில் இருப்பவர்கள் அடக்கம்.
ஓட்டலில் பணிபுரிபவர்கள் சின்னமலை வெங்கடாபுரத்தில் அருகில் பல்வேறு குடியிருப்புகளில் தங்கியிருக்கிறார்கள். அங்குள்ள 10க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் அப்பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
ஐ டி சி ஓட்டலில் தொற்று உறுதியானதை அடுத்து ஜனவரி 10ம் தேதி வரை ஓட்டலில் எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்த அனுமதியில்லை. அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்றி நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் என ஓட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
85 பேரில் பலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அனைவருமே லேசான அறிகுறிகளுடன் மட்டுமே சிகிச்சைப் பெற்று சீரான உடல்நிலையில் இருந்தனர். கொள்ளை நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.