நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 80 சதவீத தோல்வி மற்றும் மாணவி தற்கொலைக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் சென்னை திருமுல்லைவாயலை சேர்ந்த தங்கை லக்சனா சுவேதா தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். நீட் தேர்வை இரத்துச் செய்யாமல் மாணவர்களின் உயிரோடு விளையாடும் இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் துரோகச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
திருத்தணியைச் சேர்ந்த மற்றொரு தங்கை ஜெயசுதா நீட் தேர்வு தோல்வியால் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிகழ்வு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. நீட் தேர்வில் தோல்வியுற்றதற்காக உயிரைவிடும் எண்ணத்தைத் எனதருமைத் தம்பி, தங்கைகள் கைவிட வேண்டும். போர்க்குணமும், போராட்ட உணர்வும் மரபணுவிலே நிரம்பப் பெற்றிருக்கிற தமிழ்ப்பேரினத்தின் பிள்ளைகள் ஒருபோதும் நெஞ்சுரத்தையும், துணிவையும் இழக்கக்கூடாது என உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். போராடி வாழ்க்கையை வென்று கனவிலே வெற்றிபெற உள்ளவுருதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என தம்பி, தங்கையர்களுக்கு அண்ணனாக இருந்து அறிவுறுத்துகிறேன்.
நீட் தேர்வின் விளைவாக உயிரிழக்கும் தம்பி, தங்கைகளின் மரணம் என்பது தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொள்கிற தற்கொலை அல்ல! அவை ஒன்றிய, மாநில அரசுகள் சேர்ந்து செய்யும் பச்சைப்படுகொலையாகும். தமிழர்களுக்கெதிரான ஒன்றிய அரசின் நயவஞ்சகத்தனமும்,
அதற்கு ஒத்திசைந்து போகும் திராவிட அரசுகளின் கையாலாகத்தனமுமே இத்தனை பேரின் உயிரைப் போக்கியிருக்கிறது. 2017 ஆம் ஆண்டுத் தங்கை அனிதாவின் இழப்பினால் தமிழகம் கிளர்ந்தெழுந்து கொடுத்த அரசியல் அழுத்தத்தின் விளைவாக, தமிழக அரசு நீட் தேர்விலிருந்து விலக்குக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. அத்தீர்மானத்திற்கு இன்றுவரை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு அதற்கு ஒப்புதல் தரவில்லை.
அதன்பிறகு, நீட்தேர்வை நீக்கிவிடுவோம் என்று வாக்குறுதியளித்து மாணவர்களையும், பெற்றோர்களையும் நம்பவைத்துத் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த திமுக, ‘மீண்டுமொரு வெற்றுத் தீர்மானம் நிறைவேற்றியதோடு, வழக்கம்போல குழு அமைத்ததோடு தனது கடமையை முடித்துக்கொண்டது.
Read more: காலையில் உச்ச நீதிமன்ற விசாரணை; மதியம் உயர் நீதிமன்ற விசாரணை- பந்தாடப்படும் வேலுமணியின் வழக்கு!
நீட் தேர்வை ரத்துச் செய்யத் தங்களிடம் இருப்பதாகச் சொன்ன திமுகவின் ரகசியத் திட்டம் என்னவானது? நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து நீதியரசர் ஏ.கே.ராஜன் ஆணையம் தந்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை என்ன? என்ற கேள்விகளுக்குத் திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? இன்னும் எத்தனை உயிர்களை பலிகொடுக்க திமுக அரசு காத்திருக்கிறது? நீட் தேர்வை ரத்து செய்ய திறனற்ற திமுக அரசு தங்கை அனிதா பெயரில் இலவச ‘நீட்’ தேர்வு பயிற்சி மையத்தை தொடங்கிய நிலையில், நீட் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்கு மாறாக கடந்த ஆண்டுகளை விட குறைந்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள் 80 விழுக்காட்டினர் இந்த ஆண்டு தேர்ச்சிப்பெறவில்லை.
'நீட்' தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 80% தோல்வி!
நீட் தேர்வின் விளைவாக உயிரிழக்கும் தம்பி, தங்கைகளின் மரணம் என்பது தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொள்கிற தற்கொலை அல்ல! அவை ஒன்றிய, மாநில அரசுகள் சேர்ந்து செய்யும் பச்சைப்படுகொலை! https://t.co/FabWHmdBqj pic.twitter.com/yIgnWoEONn
— சீமான் (@SeemanOfficial) September 9, 2022
இதுதான் மாணவர்களின் தற்கொலையை தடுக்க திமுக அரசு எடுத்த நடவடிக்கையின் இலட்சணமா? அதிமுக அரசு கொண்டுவந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மட்டும் இல்லையென்றால் ஒரே ஒரு அரசுப்பள்ளி மாணவர்கூட நடப்பாண்டில் மருத்துவ மாணவராக தேர்வாகியிருக்க முடியாது என்பதே நடைமுறை உண்மையாகும்.
இந்திய ஒன்றிய அளவில் கல்வித்தரத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள தமிழ்நாடு, நீட் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் இந்த ஆண்டு 29வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், கல்வியில் தமிழ்நாட்டைவிட பின் தங்கியுள்ள டெல்லி, சத்தீஸ்கர், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் 70 விழுக்காடு அளவிற்கு வெற்றிப்பெற்று முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளது நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றிருப்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. இவையெல்லாம் நீட் தேர்வு என்பது கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவினை சிதைக்க உருவாக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஆகவே, நீட் தேர்வால் இனியொரு உயிரோ, ஒரு மாணவரின் மருத்துவக் கனவோ பறிபோகாது தடுக்கத் தமிழ்நாடு அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தின் கிடப்பிலிருக்கிற நீட் தேர்வு மறுசீராய்வு வழக்கை விரைந்து விசாரிக்கக்கோரி சட்டப்போராட்டம் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
அதனைச் செய்யாது, பிணக்குவியல் மேலே நாற்காலியைப் போட்டு அமர்ந்திருக்கும் பச்சைத்துரோகத்தைத் திமுக அரசு இனியும் தொடரக்கூடாது எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Government school, Neet, NEET Result, Seeman