ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சிவகாசி அருகே 8 வயது சிறுமி ஆடைகள் கிழிந்த நிலையில் சடலமாக கண்டெடுப்பு!

சிவகாசி அருகே 8 வயது சிறுமி ஆடைகள் கிழிந்த நிலையில் சடலமாக கண்டெடுப்பு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  சிவகாசி அருகே 8 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

  தமிழகத்தையே உலுக்கிய பாலி்யல் கொடூரக் கொலைகளில் ஒன்று கோவை துடியலுார் அருகே 6 வயது சிறுமியின் கொடூர மரணம். பக்கத்து வீட்டின் உறவினரான சந்தோஷ்குமார் என்ற இளைஞர், சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தார்.

  சிறுமி காணாமல் போன அன்று அனைவரும் தேடியபோது சிறுமி கிடைக்கவில்லை. ஆனால் அதிகாலையில் வீட்டருகே, அவர்கள் தேடிய இடத்தில் சிறுமியின் சடலம் கிடந்தது. இந்த வழக்கில் குற்றவாளிக்குத் துாக்குத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் அதேபோல் ஒரு கொடூர சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

  விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சித்துராஜபுரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அந்த தம்பதி. கூலித் தொழிலாளிகளான அந்த தம்பதியின் 2-வது குழந்தை தான் 8 வயது சிறுமி.

  சிறுமி அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு படித்து வந்தார். திங்கட் கிழமை காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுமி, மாலை 4 மணிக்கு வீடு திரும்பினார்.

  பின், வழக்கமாக கிராமத்தினர் இயற்கை உபாதைக்காக செல்லும் புதர் போன்ற காட்டிற்கு செல்வதாக தந்தையிடம் கூறி விட்டு சென்றுள்ளார். அதன்பின் நெடுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோரும் உறவினர்கள் காட்டிற்கு சென்று தேடியுள்ளனர்.

  காட்டில் சிறுமி கிடைக்காததால் உடனடியாக மாறனேரி காவல்நிலையத்தில் தந்தை புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் அதே காட்டில் சிறுமியின் சடலம் கிடப்பதாக அங்கு சென்றவர்கள் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

  இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர்.

  புதர் மண்டிய காட்டிற்குள் சென்று பார்த்தபோது முதல்நாள் எந்த இடத்தில் தேடினார்களோ அந்த இடத்தில் சிறுமியின் சடலம் கிடந்துள்ளது. பள்ளிச் சீருடை கலைந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்ட போலீசார், சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

  மோப்ப நாய் சிறிது துாரம் ஓடிச் சென்று சித்துராஜபுரம் ஊருக்குள் வந்து நின்றது. முதல் நாள் தேடிய இடத்தில் கிடைக்காத சிறுமி, மறுநாள் அதே இடத்தில் சடலமாகக் கிடந்தது, சிறுமியின் வீட்டருகே 200 மீட்டர் தொலைவிலேயே சடலம் கிடந்தது ஆகிய சம்பவங்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளன.

  மேலும் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர் போலீசார். இது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்துள்ள சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 6 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், சிவகாசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Sankar
  First published:

  Tags: Sivakasi