ஆஸ்திரேலியாவில் உள்ள 7 சிலைகள் விரைவில் தமிழகம் கொண்டு வரப்படுகின்றன

news18
Updated: June 13, 2018, 10:53 PM IST
ஆஸ்திரேலியாவில் உள்ள 7 சிலைகள் விரைவில் தமிழகம் கொண்டு வரப்படுகின்றன
சிலை
news18
Updated: June 13, 2018, 10:53 PM IST
தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் மத்திய தொல்லியல் துறை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு மேற்கொண்ட முயற்சிகளால், ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 7 சிலைகள் விரைவில் தமிழகம் கொண்டு வரப்பட உள்ளன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகளாக கடத்தப்பட்டு, வெளிநாடுகளில் விற்கப்பட்டுள்ள கற்சிலைகள் மற்றும் செம்புச் சிலைகளை மீட்கும் பணியில் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு சிலைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 7 சிலைகளை மீட்கும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் கேன்பெர்ரா நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 7 சிலைகள் உள்ளன.

நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள சாயாவனம் சிவன் கோயிலைச் சேர்ந்த நின்ற நிலையில் உள்ள திருஞானசம்பந்தர் சிலை, நெல்லை மாவட்டம், அத்தாளநல்லுார் முன்றீஸ்வரர் கோயிலைச் சேர்ந்த துவாரபாலகர்கள் கற்சிலை,

தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாள் அருகே உள்ள மானம்பாடி கிராமம் நாகநாத சுவாமி கோயிலைச் சேர்ந்த நடனமாடும் திருஞான சம்பந்தர் சிலை, மயிலாடுதுறை கொள்ளுமாங்குடி கிராமம் கைலாசநாதர் கோயிலைச் சேர்ந்த நந்தி கற்சிலை, அதே கோயிலைச் சேர்ந்த காளி சிலை, மானம்பாடி கைலாசநாதர் கோயிலைச் சேர்ந்த ஆறுமுக நயினார் கற்சிலை ஆகியவற்றை மீட்கும் பணியில் அரசுத் துறைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த சிலைகள், 1989-ஆம் ஆண்டில் இருந்து திருடப்பட்டு பல்வேறு நபர்கள் மூலம் விற்கப்பட்டு இறுதியில், ஆஸ்திரேலியாவின் கேன்பெர்ரா நகரில் உள்ள அருங்காட்சியகத்திற்கு பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் அனைத்தும், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இருந்து திருடப்பட்டவை.

அந்தக் கோயில்களில், இந்த சிலைகள் குறித்த ஆவணங்கள் எவையும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்பதை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த வழக்கில், சுபாஷ் கபூர், மும்பையைச் சேர்ந்த வல்லப பிரகாஷ், ஆதித்த பிரகாஷ், சஞ்சீவி அசோகன், தஞ்சை கருந்தட்டான்குடியைச் சேர்ந்த ஊமைத்துரை, அண்ணாதுரை, லட்சுமி நரசிம்மன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Loading...
சிலைகள் களவு குறித்து ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து உரிய ஆவணங்களை அளித்ததை அடுத்து, கேன்பெர்ரா அருங்காட்சியகம் இவற்றை தமிழக அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இந்த சிலைகளை மீட்க சட்டப்பூர்வமான நடவடிக்கையில், தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட அரசுத் துறைகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...