தமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலில் 77.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பெரிய அளவில் எந்தவித அசம்பாவிதமும் இன்றி தேர்தல் முடிவடைந்திருப்பதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு
தமிழகத்தில் அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இதேபோன்று 18-ம் தேதி நடைபெற்ற தேர்தலின்போது தவறுகள் நடந்ததாக கண்டறியப்பட்ட 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
நடுவிரலில் மை வைப்பு
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த தொகுதிகளில் ஏற்கனவே மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றதால், இந்த முறை வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்பட்டது.
வேட்பாளர்களின் பெயர்கள் அகரவரிசைப்படி இல்லாததால் குழப்பம்
சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறால் வாக்குப்பதிவு அரை மணி நேரம் வரை தாமதமானது. அரவக்குறிச்சி சவுந்திராபுரம் வாக்குச்சாவடியில் 4 இயந்திரங்களில் இருந்த 63 வேட்பாளர்களின் பெயர்கள் அகரவரிசைப்படி இல்லாததால் வாக்காளர்கள் குழம்பினர்.
சிறிது நேர குழப்பத்திற்கு பின் பெயர்கள் அகரவரிசைப்படுத்தப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. சூலூர் தொகுதி கருமத்தம்பட்டி வாக்குச்சாவடி இயந்திரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொத்தான் வேலை செய்யாததால் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் தாமதமானது.
சர்கார் பட பாணியில் வாக்களித்த முதியவர்
திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட கூத்தையார்குண்டுவை சேர்ந்த முதியவர் சின்ன அழகுவின் வாக்கை வேறு ஒருவர் போட்டுவிட்டதால், அதிர்ச்சியடைந்த அவர் சர்கார் பட பாணியில் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து அவரை சேலஞ் முறையில் 49-பி படிவத்தை வழங்கி அதிகாரிகள் வாக்களிக்க அனுமதித்தனர்.
வாக்குச்சாவடிக்குள் அத்துமீறிய திமுக, அதிமுகவினர்
பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடி முன்பாக அமமுகவினர் பரிசுபெட்டக சின்னத்தை காட்டி வாக்குசேகரித்ததால் அதிமுகவினர் தகராறில் ஈடுபட்டனர். இருதரப்பிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதேபோன்று திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் போலீசாரின் தடுப்பை மீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்தனர். இதனால், அதிமுகவினரும் வாக்குச்சாவடிக்குள் நுழையும் போது அமமுகவினர் தகராறில் ஈடுபட்டதால் போலீசார் அனைவரையும் விரட்டியடித்தனர்.
திமுக, அதிமுக சார்பில் புகார் மனு அளிப்பு
அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களை திமுகவினர் வாகனங்களில் அழைத்து சென்று வாக்களிக்க செய்ததாகவும் அதிமுக தரப்பில் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதேபோன்று திமுக தரப்பிலும் புகார் மனு அளிக்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள் மூலம் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு
6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்கு இயந்திரங்கள் அரசியல் கட்சி முகவர்கள் முன்பு சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
தேர்தல் நிறைவடைந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, 4 தொகுதி இடைத்தேர்தலில் சராசரியாக 77.62 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாகக் கூறினார். மறுவாக்குப்பதிவு நடைபெற்ற 13 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 84.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
வேலூர் தொகுதிக்கான தேர்தல் அறிவிப்பு வரவில்லை
வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடத்துவது குறித்து இதுவரை தலைமை தேர்தல் ஆணையம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும் வாக்கு எண்ணிக்கை குறித்து வாக்கு எண்ணிக்கை மைய அலுவலர்களுக்கு மீண்டும் பயிற்சியளிக்கப்பட உள்ளதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
Also see... அதிமுகவுடன் கூட்டணியா...? ராஜேந்திர பாலாஜிக்கு தமிழருவி மணியன் பதிலடி!
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.