ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் இன்று முதல் 702 அரசு ஏ.சி. பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன

தமிழகத்தில் இன்று முதல் 702 அரசு ஏ.சி. பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன

குளிர்சாதனப் பேருந்து

குளிர்சாதனப் பேருந்து

பயணிகள் கண்டிப்பாக முககவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக நிறுத்தப்பட்ட குளிர்சாதனப் பேருந்து சேவை 144 நாட்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன. அதன்படி, 702 குளிர்சாதன வசதி கொண்ட அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர், வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, கடந்த ஜூன் மாதம் முதல் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. எனினும், ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், நோயின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், ஏ.சி. பேருந்துகளையும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதலுடன் இன்று முதல் ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கடந்த 24ஆம் தேதி தெரிவித்தார்.

அதன்படி, சென்னை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 340 பேருந்துகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்தில் உள்ள 92 பேருந்துகள், சேலம் கோட்டத்தில் உள்ள 50 பேருந்துகள், கோவை கோட்டத்தில் உள்ள 50 பேருந்துகள், கும்பகோணம் கோட்டத்தில் உள்ள 52 பேருந்துகள், மதுரை கோட்டத்தில் 40, நெல்லை கோட்டத்தில் 30, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 48 குளிர்சாதனப் பேருந்து என தமிழகம் முழுவதிலும் 702 ஏ.சி. பேருந்துகள் 144 நாட்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன.

இதற்காக கடந்த சில நாட்களாக ஏ.சி. பேருந்துகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டன. அவை இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் தேவைக்கு ஏற்ப இயக்கப்படுகின்றன. இந்நிலையில், பயணிகள் கண்டிப்பாக முககவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Must Read : எச்.ராஜாவின் சர்ச்சைக்கு இதோடு முற்று புள்ளி வைக்க வேண்டும் - அண்ணாமலை

அதேபோல, அனைத்து பேருந்துகளிலும் ‘சானிடைசர்’ கொண்டு கைகள் சுத்தம் செய்த பிறகுதான் பயணிகள் பயணம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக பயணிகளுக்கு நடத்துனர் மூலம் ‘சானிடைசர்’ வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Bus, TN Govt, TNSTC