ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருவதன் காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து இந்திய மாணவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ரஷ்யா நாட்டில் மருத்துவம் படித்து வரும் இந்திய மாணவர்களின் பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர். ரஷ்யாவின் எல்லையில் உள்ள கிரிமியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கும்படி இந்திய மாணவர்களின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் கிரிமியா பல்கலைக்கழகம், ஊருக்கு செல்ல விரும்பும் இந்திய மாணவர்கள் ஊருக்கு செல்லலாம் என அனுமதி அளித்தது. இந்நிலையில் கோவையைச் சேர்ந்த மாணவர்கள் புவனேஷ் கார்த்திக், டீனா ஜெனிபர் ஆகியோர் விமானம் மூலம் வந்தனர். கோவை விமான நிலையத்தில் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, ரஷ்யா போரில் ஈடுபட்டு இருப்பதால் பெற்றோர் பயப்படுவதாகவும், அவர்கள் அழுத்தம் காரணமாகவே ஊர் திரும்பியதாகவும் தெரிவித்தனர். கிரிமியா பல்கலைகழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருவதாகவும் தற்போது 70 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பி இருப்பதாகவும் தெரிவித்தனர்.
ரஷ்யாவில் கிரிமியா பல்கலையில் மட்டுமே இந்திய மாணவர்கள் விருப்பபட்டால் ஊருக்கு செல்லலாம் என சொல்லி இருப்பதாகவும், ஆன் லைன் மூலம் படிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் ரஷ்யாவில் இருந்து வந்த மாணவர்கள் தெரிவித்தனர். ரஷ்யாவில் பயப்படும்படி எதுவும் இல்லை என்றாலும், பெற்றோர் அழுத்தம் காரணமாகவே வந்ததாக ரஷ்யாவில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தெரிவித்தனர்.
Must Read : உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தமிழகத்திலேயே மருத்துவப் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்தது கிரிமியா. இந்நிலையில், அங்கே வசிக்கும் மக்கள் தாங்கள் ரஷ்யாவுடன் இணைந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் ரஷ்யாவுடன் இணைந்து கொள்ள விரும்பி வாக்களித்ததால், 2014ஆம் ஆண்டு கிரிமியா ரஷ்யாவுடன் இணைந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.