நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு விட்ட நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சமூக - பொருளாதார நிலையை கருதி, அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முந்தைய அதிமுக அரசு முடிவு செய்தது. அதன்படி, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையை ஏற்று அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்தது.
இந்த சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதேபோன்று அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களும், இதே 7.5 சதவீத இடஒதுக்கீட்டை தங்களுக்கும் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு விசாரித்து வந்தது. அரசு தரப்பு வாதத்தின் போது, தனியார் பள்ளி மாணவர்களை போன்று அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களால் பயிற்சி மையங்களுக்குச் சென்று பயிற்சி பெற முடியாது என்பதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள மருத்துவ இடங்களில்தான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுவதால், தகுதியுள்ள பொதுப் பிரிவு மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று முறையிடப்பட்டது.
அதே சமயம் அரசு பள்ளி மாணவர்களை கருத்தில் கொண்ட தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தங்களை கவனத்தில் கொள்ள தவறிவிட்டன என்று அரசு உதவி பெறும் பள்ளிகள் தரப்பில் வாதிடப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப் போல இலவச சீருடை, புத்தகங்கள், காலணி உள்ளிட்டவை அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் வழங்கப்படுவதாகவும், எனவே தங்களுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப் போல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் வாதிட்டனர்.
Must Read : இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம்.. வழக்கின் முக்கிய நபர் வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தியிருந்தால் நீட் பயிற்சி மையங்களுக்கான தேவை ஏற்பட்டு இருக்காது” என்றார். பின்னர், அனைத்து தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில் தமிழக அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.