நெல்லை சுடலைமாட சுவாமி கோவிலில் தகராறு.. பூசாரி கொலை வழக்கில் 7 பேர் சரண்

நெல்லை கோவில் பிரச்னயில் நடந்த கொலை

நெல்லை மாவட்டத்தில், கோயில் விழாவில் கடை அமைப்பதில் ஏற்பட்ட தகராறில், பூசாரி படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சையில் உள்ளார். இந்தக் கொலை வழக்கில் 7 பேர் சரணடைந்துள்ளனர். கோயில் விழாவில் நடந்தது என்ன?

 • Share this:
  நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற சுடலைமாட சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 1ம் தேதி கோடை விழா நடைபெறும். அன்றைய தினம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நேர்த்திக் கடன் செலுத்தி வழிபாடு செய்வார்கள். அப்போது நுாற்றுக்கணக்கில் ஆடு, கோழிகள் பலியிடப்படும். இந்த நிலையில், ஏப்ரல் 14ம் தேதி சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்துள்ளது.

  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பூஜை சுருக்கமாக நடந்துள்ளது. அதை முன்னிட்டு கோயிலில் பலர் கடைகள் போட்டுள்ளனர். அப்போது கோயிலை நிர்வகிக்கும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் கடைகள் அமைத்த வேறு சமூகத்தினருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

  பிரச்னை தொடர்வதை விரும்பாத கோயில் நிர்வாகத்தினர், ஞாயிற்றுக்கிழமை அன்று கோயிலில் அனைத்து தரப்பு முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தையின் போது அங்கு இருந்தவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி சண்டை நடந்துள்ளது.அதில், பூசாரி சிதம்பரம் மற்றும் நடராஜ பெருமாள் ஆகியோரை சிலர் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

  படுகாயமடைந்த இருவரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியில், சிதம்பரம் உயிரிழந்தார். நடராஜ பெருமாள் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி நெல்லை அரசு மருத்துவமனையில் சிதம்பரத்தின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  உயிரிழ்ந்த சிதம்பரத்தின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

  மேலும் படிக்க... காதலன் நினைப்பிலே இருந்த மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் கைது

  இதற்கிடையே, சீவலப்பேரி காவல்நிலையத்தில், 23 வயதான முருகன், பேச்சிக்குட்டி, 19 வயதான இசக்கி முத்து, மாசான முத்து, முத்துமாரிதுரை, 24 வயதான தங்கப்பாண்டி மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 7 பேர் சீவலப்பேரி காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களைக் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கோயிலில் கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில், பூசாரி கொல்லப்பட்ட சம்பவம், சீவலப்பேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: