சிறையில் இருந்து ஸ்கெட்ச் போட்டு லாரிகளை திருடிய கும்பல் கைது

லாரி திருட்டின் மூளையாக செயல்பட்ட மாணிக்கம், ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கில் கைதாகி பெருந்துறை சிறையில் உள்ளார். சிறையில் இருந்தபடி அவர் அளிக்கும் திட்டத்தை நிறைவேற்றி வரும் கூட்டாளிகள்தான் இப்போது சிக்கியுள்ளனர்.

Web Desk | news18
Updated: December 7, 2018, 8:32 AM IST
சிறையில் இருந்து ஸ்கெட்ச் போட்டு லாரிகளை திருடிய கும்பல் கைது
திருடப்பட்ட லாரி
Web Desk | news18
Updated: December 7, 2018, 8:32 AM IST
நாமக்கல் மாவட்டத்தில் லாரிகளை திருடி விற்று பல லட்சம் ரூபாய் சம்பாதித்த திருட்டு கும்பலைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கனரக லாரிகளைத் திருடிய 7 பேர் கொண்ட கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ளது. நூதன முறையில் லாரிகளைத் திருடி மீண்டும் அவற்றை விற்று பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் இவர்களின் பின்னணியில் ஒரு பெரிய நெட்வொர்க்கே இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

லாரி திருட்டு எப்படி நடக்கிறது?

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர், சமீபத்தில் வாங்கிய லாரியை சர்வீஸ் செய்வதற்காக நாமக்கல் அருகே காதப்பள்ளியில் உள்ள லாரி பட்டறைக்கு நவம்பர் 20-ம் தேதி கொண்டு சென்றார். லாரியில் எண்கள் மாற்றப்பட்டிருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த பட்டறைப் பணியாளர்கள் நல்லிபாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கண்ணனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் 7 பேர் சிக்கினர்.

சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த மாணிக்கத்தின் கூட்டாளிகளான செல்வக்குமார், தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த சாமிதுரை, போச்சம்பள்ளியைச் சேர்ந்த விஸ்வநாதன், சேலம் மாவட்டம் பூலாம்பட்டியைச் சேர்ந்த சம்பத்குமார், எடப்பாடியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி மற்றும் மேட்டூரைச் சேர்ந்த குணசேகரன், கார்த்திக் ஆகியோர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் லாரி திருட்டின் மற்றொரு பக்கம் வெளியானது.

லாரி திருட்டு செய்தது எப்படி?

மாணிக்கம் தலைமையிலான கும்பல், 8 அல்லது 10 சக்கர கனரக லாரிகளைக் குறிவைப்பார்கள். அதன்பின்னர் அந்த லாரிகள் எங்கெங்கு நிறுத்தப்படுகின்றன, அவற்றின் பாதுகாப்பு எந்தளவு உள்ளது என்பதை கண்காணிப்பார்கள். ஒருகட்டத்தில் லாரி பாதுகாப்பின்றி நிறுத்தப்படுவதை அறிந்து திருடிச் சென்று விடுவார்கள்.
Loading...
பின்பு அதற்கென உள்ள ஒரு பட்டறையில், சேசிஸ் மற்றும் இன்ஜினில் உள்ள எண்களை மாற்றி விடுவார்கள். லாரியின் தோற்றம் மற்றும் எண்களை மாற்றுவதற்கு அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் செலவழிப்பார்கள். அதன்பின் போலி எண்களின் அடிப்படையில் போலி ஆர்சி புத்தகத்தைத் தயாரித்து விடுவார்கள். போலி ஆர்சி புத்தகத்தின் பேரில் அந்த திருட்டு லாரிக்கு காப்பீடும் பெற்று விடுவார்கள். இந்த போலி ஆவணங்களைக் காண்பித்து லாரிகளை தங்கள் கூட்டாளிகள் மூலம் மற்றவர்களுக்கு விற்று விடுவார்கள். 3 அல்லது 4 பேரிடம் லாரிகள் கைமாற்றப்பட்ட பின், சம்பந்தப்பட்ட லாரிகள் திருடு போனதாக புகாரளிப்பார்கள்.

இதனால் திருடு போன லாரிகளின் பேரில் உள்ள 10 லட்சம் ரூபாய்க்கு மேலான இழப்பீட்டுத் தொகையையும் வாங்கி விடுவார்கள். லாரியை விற்ற வகையில் வரும் தொகை மற்றும், காப்பீட்டுத் தொகை என கணிசமான தொகை திருட்டுக் கும்பலுக்குக் கிடைத்து விடும்.

லாரி திருட்டில் கைது செய்யப்பட்டவர்கள்


இந்த திருட்டை மிக நேர்த்தியாக போலி ஆவணங்களை வைத்து இந்த கும்பல் அரங்கேற்றியுள்ளது. லாரி திருட்டின் மூளையாக செயல்பட்ட மாணிக்கம், ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கில் கைதாகி பெருந்துறை சிறையில் உள்ளார். சிறையில் இருந்தபடி அவர் அளிக்கும் திட்டத்தை நிறைவேற்றி வரும் கூட்டாளிகள்தான் இப்போது சிக்கியுள்ளனர். லாரிகள் திருட்டை தடுக்க அரசு மட்டுமின்றி லாரி உரிமையாளர்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.

இந்த வழக்கில், மொத்தம் 2 லாரிகளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவை நாமக்கல் வள்ளிபுரம் அருகே திருடப்பட்டது என கைதானவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அக்குபாய் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். லாரிகளுக்கு காப்பீடு அளிக்கும் தனியார் நிதி நிறுவனங்களின் பணியாளர்களுக்கும் லாரி திருடும் கும்பலுக்கும் தொடர்பிருக்கிறதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் போலி ஆர்சி புத்தகம் தயாரிக்கும் கும்பலையும் தேடி வருகின்றனர்.

Also see... சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளுவதில் முறைகேடு
First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்