திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது

திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது

பாலகிருஷ்ணன்

பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு.

 • Share this:
  2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

  பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. அதனை சிபிஎம் ஏற்றுக் கொண்டதால், ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

  தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் இம்மாதம் 12 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதனால், அரசியல் களம் பரபரப்பாகக் காணப்படுகின்றது.

  திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீட்டு கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. அதேபோல, இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

  அதனைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கூட்டணி ஒப்பந்தத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் கையெழுத்திட்டனர். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.

  Must Read : மகளிர் உரிமையைப் பாதுகாக்க சனாதன சக்திகளை வீழ்த்துவோம் - திருமாவளவன்

   

  இந்நிலையில், திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே இன்று தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

  இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,  “ஊழல் பெருகியுள்ள அதிமுக - பாஜக ஆட்சியை அழித்து, திமுகவை வெற்றி பெற செய்யவுள்ளோம். திமுக தலைவர் தலைமையில் சிபிஎம்க்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் அதிமுக-பாஜக ஆட்சியை அமைக்க விட கூடாது என்ற கோட்பாட்டில் இருக்கின்றோம். எங்களை பொறுத்தவரை 6 இடங்கள் குறைவு என்றாலும், அதிமுக-பாஜக கூட்டணியை முறியடிக்கவும், எங்கள் கூட்டணியில் பிரச்சனை ஏற்படாமல் இருக்கவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். தமிழகத்தில் மாற்று ஆட்சி அமைய வேண்டும்.

  234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற செயலாற்றுவோம். மதவெறி பிடித்த பிஜேபியின் களமாக தமிழகம் மாறி விடக்கூடாது. திமுக கூட்டணியில் உள்ள அனைத்து வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்வோம்.” என்றார்.
  Published by:Suresh V
  First published: