6 POLICE OFFICERS SUSPENDED IN TRICHY DUE TO POSTAL VOTING BRIBE VAI MAH
திருச்சி காவல்நிலையங்களில் பணத்துடன் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்.. எஸ்.ஐ. தலைமைக் காவலர் உள்பட 6 காவலர்கள் பணியிடை நீக்கம்..
திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் போலீசாரின் தபால் ஓட்டுகளை பெறுவதற்காக, கவர்களில் பணம் வைத்து வழங்கப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் நேற்று முதல் தங்களது தபால் ஓட்டுகளை செலுத்தி வருகின்றனர். முதல் நாளான 26ஆம் தேதி மண்டல அலுவலர்கள், பறக்கும் படையினர், கண்காணிப்புக்கு குழுவினர் உள்ளிட்டோர் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் (27ம் தேதி) வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் வாக்களித்தனர். இதன்படி மாவட்டத்தில் உ ள்ள 9 தொகுதிகளிலும் மொத்தம் 8, 194 பேர் வாக்களித்துள்ளனர்.
தொடர்ந்து, திருச்சி மாநகர போலீசார், நாளை (29ம் தேதி) தங்களது தபால் ஓட்டுகளை செலுத்த உள்ளனர். இந்நிலையில், திருச்சி மேற்குத் தொகுதிக்குட்பட்ட, தில்லைநகர், உறையூர், அரசு மருத்துவமனை, நீதிமன்றம், எடமலைப்பட்டிபுதூர், கண்டோன்மெண்ட் ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் முதல், காவலர்கள் வரை, அவர்கள் 'தகுதிக்கேற்ப' கவர்களில் பணம் வைத்து விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவலறிந்த மாநகர காவல் ஆணையர் லோகநாதன் திடீர் ஆய்வு செய்தார். இதில் சுமார் 100 கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போலீசார் மற்றும் வருமான வரித்துறையினர், வருவாய்துறையினர் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தில்லைநகர், உறையூர் காவல்நிலைய எழுத்தர்களிடம் காவல்துறை உதவி ஆணையர் வீரமுத்துவும் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்.
இதில் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா விவகாரத்தில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மாநகர காவலர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.