HOME»NEWS»TAMIL-NADU»500 acres of paddy and groundnut crops damaged due to heavy rainfall in ramanathapuram video vai
ராமநாதபுரத்தில் பெய்த கனமழை.. 500 ஏக்கருக்கு மேல் நெல், கடலை பயிர்கள் சேதம்..
திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 500 ஏக்கருக்கு மேல் நெல், கடலை மற்றும் எள் விவசாயம் செய்த விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, தினைக்குளம் , களிமங்குண்டு, வண்ணாங்குண்டு ஊராட்சி பகுதிகளில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் மீனவ தொழிலாகும். விவசாய பகுதிகளான கட்டையன் பேரன் வளைவு, முங்கான் வலசை, மொத்தி வலசை, களிமங்குண்டு உள்ளிட்ட 30 கிராமங்களுக்கு மேல் நெல், பயறு, கடலை உள்ளிட்ட பயிர்கள் மகசூல் காலம் ஆகிய காலங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் விளைவித்தனர்.
இந்நிலையில் ஜனவரி மாதம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. அதன் காரணமாக இப்பகுதியில் மழைநீர் தேங்கி அனைத்து விளைநிலங்களும் தண்ணீரில் மூழ்கி அழுகியது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழைநீர் தேங்கியதால் சாய்ந்து வயலிலேயே முளைக்கத் தொடங்கின.
இதனால் செய்வதறியாது திகைத்த விவசாய மக்கள் வேதனையில் துடித்தனர். மேலும் அரசு வழங்கக்கூடிய காப்பீட்டுத் தொகை முறையாகவும் சரியான முறையில் வழங்கமாறும் கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.