ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள மிக்கேல் பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாயிரம் ஏக்கரில் நெல் மற்றும் 500 ஏக்கரில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளன. இந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால், பால் பருவத்தில் இருந்த நெற்பயிர்கள் மற்றும் காய்க்கும் தருவாயில் இருந்த மிளகாய் செடிகள் மழைநீரில் மூழ்கி அழுகிவிட்டன.
தொடர் மழையால் விளைநிலத்துக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதாகவும், மிக்கேல் பட்டினம் - மகிண்டி இடையே குடிமராமத்து பணியின்போது கண்மாய் மடை உயர்த்தப்பட்டதே இதற்கு காரணம் எனவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
உயர்த்தி கட்டப்பட்ட கண்மாய் மடையை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வங்கிகளில் நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு பணம் வாங்கியும் விவசாயம் செய்து வரும் நிலையில், தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.