தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.
5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, துணை ஆணையர்கள் அடங்கிய தேர்தல் ஆணையத்தின் முழு ஆணைய கூட்டம் கடந்த 23-ம் தேதி நடைபெற்றது.
அதன்பிறகு கடந்த புதன்கிழமை தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும், அதற்கு மறுநாள் அசாம், மேற்குவங்க மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து இன்று நடைபெறும் முழு ஆணைய கூட்டத்தில் 5 மாநில தேர்தல் தேதி இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.