அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான, 14-வது ஊதிய ஒப்பந்த நான்காம் கட்ட பேச்சுவார்த்தை, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், குரோம்பேட்டையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை 3 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருக்க வேண்டியது என்றும், காலதாமதமாக நடந்துவருகிறது என்றும் கூறினார்.
போக்குவரத்து துறையில் பணியில் இருந்தபோதே, மரணமடைந்தோரின் வாரிசுகளுக்கு 10 ஆண்டுகளாக வேலை வழங்கப்படவில்லை என குறிப்பிட்ட அமைச்சர், முதற்கட்டமாக வரும் 14ம் தேதி பணியாணை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். தொழிற்சங்கங்கள் வைத்த கோரிக்கைகளில் 85 விழுக்காட்டிற்கு ஒப்புதல் ஏற்பட்டிருப்பதாகவும், ஒரிரு பிரச்னைகளில் பேசி முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். பெண்களுக்கான ஒயிட் போர்டு பேருந்துகள் குறைக்கப்படவில்லை என்றும் அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன், ‘பேச்சுவார்த்தை கிட்டதட்ட 3 மணி நேரமாக நடந்தது. எடப்பாடியார் வழங்கியது போல நல்ல ஊதியத்தை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. எங்கள் கோரிக்கை மலைக்கும் மடுவுக்குமாக இருக்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஊதிய உயர்வு என்பது அதிமுக கொடுத்த இடைக்கால நிவாரணத்தை தொழிலாளர்களிடமிருந்து திரும்ப பெற்றிடும் வகையில் இருக்கிறது.
Also Read :
ஆம்பூர் பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பு.. காரணம் கனமழை
அதிமுக ஆட்சியில் 25 சதவீத உயர்வுக்கு கடிதம் கொடுத்தவர்கள், இன்று 8 சதவீதம் போதும் என்று பேச்சுவார்த்தையின் தொடக்கத்திலேயே கூறிவிட்டனர். போக்குவரத்து துறை 48 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் இருப்பதாக அமைச்சர் கூறுகிறார். அதிமுக ஆட்சியின் போதே நாங்கள் முன்வைத்த 53 கோரிக்கையில் முதல் கோரிக்கை போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பதுதான். 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என எதிர்பார்த்தோம் என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.