சென்னை ரேஷன் கடை ஊழியரிடமிருந்து பொங்கல் பரிசு கொடுக்க வைத்திருந்த ரூ.5 லட்சம் வழிப்பறி...

சென்னை ரேஷன் கடை ஊழியரிடமிருந்து பொங்கல் பரிசு கொடுக்க வைத்திருந்த ரூ.5 லட்சம் வழிப்பறி...

மாதிரிப் படம்

சென்னை கோயம்பேட்டில் பொது மக்களுக்கு வழங்குவதற்காக ரேஷன் கடை ஊழியர் வைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    சென்னை கோயம்பேடு சாஸ்திரி நகரில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பணியாற்றி வருபவர் பாஸ்கர். இவர் நேற்று இரவு தனது பணியை முடித்துவிட்டு ரேஷன் கடையில் பொங்கலுக்காக கொடுக்க வைத்திருந்த ரூபாய் 8 லட்சம் பணத்தை தனது பையில் எடுத்துக்கொண்டு, அதே ரேஷன் கடையில் பணியாற்றக்கூடிய தனது நண்பர் சக்திவேல் உடன் கோயம்பேட்டில் மது அருந்தியுள்ளார். பின்னர், அரும்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு பாஸ்கரன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது செல்லும் வழியில் அடையாளம் தெரியாத ஒரு பெண், பாஸ்கர் மீது இடித்துவிட்டு ஆசைவார்த்தை காட்டி பேசியுள்ளார். இதனை நம்பி பாஸ்கரன் ஆட்டோவில் ஏறி பாரிஸில் உள்ள தனியார் விடுதியில் உல்லாசமாக இருக்க சென்றுள்ளார். பின்னர் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் போது குடிபோதையில் உள்ள பாஸ்கரிடம் பணம் கேட்டு பெண் மிரட்டியுள்ளார். இல்லையெனில் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக கூச்சலிடுவேன் என மிரடியுள்ளார்.

    இதனையடுத்து பாரிஸில் உள்ள ஒரு ஏடிஎம்மில் பணத்தை எடுத்து வந்து கொடுத்தவுடன், சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் தான் வைத்திருந்த பையை பாஸ்கர் சோதனை செய்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 8 லட்சம் ரூபாய் பணத்தில் 5.15 லட்சம் ரூபாய் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து பாஸ்கர் அருகில் இருந்த வடக்கு கடற்கரை போலீசாரிடம் புகார் அளித்தார்.

    புகாரின் பெயரில் வடக்கு கடற்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட பெண் யார்? என்றும் ஆட்டோ ஓட்டுனர் யார்? என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடையில் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் பணத்தை திட்டமிட்டு வழிப்பறி செய்யப்பட்டதா அல்லது பாஸ்கரன் பணத்தையெடுத்துவிட்டு நாடகமாடுகிறாரா என்ற கோணத்தில் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு வடக்கு கடற்கரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: