3 மாதத்தில் 5.49 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன - அமைச்சர் சக்கரபாணி விளக்கம்

கோப்புப் படம்

திமுக ஆட்சிக்கு வந்து 3 மாதத்தில் 5.49 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

  • Share this:
    சட்டப்பேரவையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அளித்த பதிலுரையில், ‘திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 30 நாட்களில் 10 கோடி ரூபாய் நிதியும், இதுவரை 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். இதுவரை புதிய ரேஷன் கார்டுக்கு 10,60,809 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்று, அதில் 7,83,292 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் 5,81,196 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 5,49,505 விண்ணப்பதாரர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டு, மீதமானவர்களுக்கு அட்டை அச்சிடும் பணி நடைபெறுகிறது.

    அனுமதிக்கப்பட்ட ஈரப்பத அளவை விட அதிகமான ஈரப்பதத்தில் கடந்த ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் டன் அரிசி கண்டறியப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதிக்குள் அனைத்து தனியார் அரிசி ஆலைகளிலும் கலர் சார்டர் இயந்திரம் பொருத்தி கருப்பு மற்றும் பழுப்பு நிற அரிசிகளை நீக்கித்தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மழைக்காலங்களில் திறந்தவெளியில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் மழையில் நனைவது குறித்து செய்திகள் கிடைக்கப் பெற்றதும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி 1,57,804 டன் நெல் போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பாக கூரையுள்ள இடங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. மே7ம் தேதி முதல் ஆகஸ்ட் 23ம் தேதி வரை உணவு வழங்கல் துறைக்கு ரூ. 2,221.70 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. 2009-10ம் ஆண்டில் கடைசியாக விவசாயிகளுக்கு மாநில அரசின் ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பின் தற்போது மாநில அரசின் சார்பிலான ஊக்கத்தொகை அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    3,000 கார்டுகளுக்கு மேல் உள்ள பெரிய ரேஷன் கடைகள் மற்றும் பெரிய கடைகளைப் பிரித்து பகுதிநேரக் கடைகளாக மாற்றுவது குறித்து பரிசீலிக்க குழு அமைக்கப்படவுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் 9 ஆண்டுகளில் 53 ஆயிரம் கோடி ரூபாய் உணவு மானியமாக வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 3 மாதங்களில் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உணவு மானியம் ஒதுக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published: