திருப்பத்தூரில் 5 கோடி ரூபாய் சீட்டு மோசடி செய்தவர்களை வழிமறித்து அடித்த வாடிக்கையாளர்கள்

மோசடி செய்தவர்களை கைது செய்து அழைத்து செல்லும் போலீசார்

திருப்பத்தூரில் 5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றம்சாட்டி கம்பெனி உரிமையாளர்களை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டுத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மோசடி நடந்தது எப்படி? போலீசார் நடவடிக்கை என்ன?

 • Share this:
  திருப்பத்தூர் மாவட்டம், வெங்களாபுரம் அடுத்த முத்தம்பட்டியில், 48 வயதான பாபு, 43 வயதான நடராஜன் இருவரும், அகர்பத்தி தயாரிக்கும் நிறுவனம், கயிறு திரிக்கும் நிறுவனம் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர். திங்கட்கிழமை அன்று தருமபுரி மாவட்டத்தில் இருந்து ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் அகர்பத்தி தயாரிக்கும் நிறுவனத்தின் முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். நிறுவன உரிமையாளர்களான பாபு, நடராஜன் இல்லாததால் திடீர் சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்தனர்.

  திருப்பத்தூர் - ஆலங்காயம் சாலைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபடத் தயாரானபோது, கிராமிய காவல் துறையினர் விரைந்து சென்று தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகல்கள் வெளியாகின.

  பாபு, நடராஜன் இருவரும், 2012ம் ஆண்டு, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கிரீன் பெர்பார்மர்ஸ் லேண்ட் புரமோட்டர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளனர் மாதம் 1000 ரூபாய் தந்தால் 6 ஆண்டுகள் கழித்து இரு மடங்கிற்கு நிகராக ஒரு லட்சத்து 20000 ரூபாய் தருவதாக ஆசை காட்டி, 15 ஏஜென்ட்டுகள் மூலம் வசூல் வேட்டை நடத்தியுள்ளனர்.

  இவர்களை நம்பி 3 மாவட்டங்களிலும் பல கிராம மக்கள் தங்கள் பணத்தைக் கொடுத்தனர். 6 ஆண்டுகளில் இருவரும் 5 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. 6 ஆண்டுகள் கழித்து வாடிக்கையாளர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது அந்த திட்டமே நிறுத்தி வைக்கப்பட்டதாகக் கூறி மோசடி செய்துள்ளனர்.

  பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். பொருளாதார குற்றப் பிரிவு மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோரிடமும் புகாரளித்தனர். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் வாடிக்கையாளர்கள் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை காரணம் காட்டியே பணத்தை இருவரும் திரும்பக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

  இந்த நிலையில்தான், திங்கட்கிழமை அன்று தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வாடிக்கையளார்கள் பாபு மற்றும் நடராஜனின் நிறுவனங்களுக்கு வந்து நேரடியாக முற்றுகையிட்டனர். சம்பவ இடத்தில் போலீசார் இருப்பதை அறிந்த பாபுவும், நடராஜனும் அங்கு சென்றனர். பாபுவை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள் அவரை முற்றுகையிட்டு தங்கள் பணத்தை திருப்பித் தரும்படி கோரினர்.

  பாபு அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது அவரது சட்டையைப் பிடித்து பின்னால் இழுத்தனர். நடராஜன் காவல்துறை ஆய்வாளரிடம் சமரசம் பேச முயன்றார். ஆனால் ஆய்வாளரோ வாவடிக்கையாளர்களுக்குப் பணத்தைக் கொடுக்கும் வழியைப் பாருங்கள் என்று எச்சரித்தார். சிறிது நேரம் போலீசாரிடம் பேசிகக் கொண்டிருந்த நடராஜன், சிறிது நேரம் கழித்து, வயல் வெளி வழியாக நடந்து ஓட்டம் பிடித்தார்.

  மேலிஉம் படிக்க... கள்ளக்காதல் விவகாரம் : சொத்துக்காக கொழுந்தனைக் கொன்ற அண்ணி

  பின்னர் பாபுவை மட்டும் பிடித்த போலீசார், காவல்நிலையம் அழைத்துச் செல்வதற்காக காரில் அமர வைத்தனர். வாடிக்கையாளர்கள் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்; முறையாகப் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய போலீசார் தங்கள் காருடன் அங்கிருந்து சென்றனர். 5 கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனங்களின் உரிமையாளர்களை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Vaijayanthi S
  First published: