முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் இலங்கை கடற்படையால் கைது

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் இலங்கை கடற்படையால் கைது

  • Last Updated :

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 43 பேர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று, 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், 6 விசைப் படகுகளை சிறைபிடித்து அதிலிருந்து 43 பேரை கைது செய்தனர். தற்போது 43 மீனவர்களும் காங்கேசன்துறை முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், மீனவர்கள் கைதுசெய்யப்பட்டது குறித்து ராமேஸ்வரத்தில் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில், விசைப்படகு மீனவர்கள் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

    இதனால், 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. திடீர் வேலைநிறுத்தத்தால் 1 லட்சம் பேர் வரை வேலையிழந்துள்ளனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் நாளை காலை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

    Also Read : ஃபாக்ஸ்கான் பெண் ஊழியர்கள் இறந்ததாக வதந்தி பரப்பிய சேலம் வளர்மதி கைது

    top videos
      First published: