மருத்துவத்துறையில் 4000 காலி பணியிடங்கள் உள்ளதாகவும் அவற்றை விரைவில் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன், மடத்துக்குளம் தொகுதிக்குட்பட்ட மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. அவசர சிகிச்சைக்காக மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். எனவே, கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் என 4000 ஆயிரம் பேரை புதிதாக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ள மருத்துவமனையிலும் காலிப் பணியிடம் நிரப்பப்படும் என தெரிவித்தார்.
நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனை வெறும் தகவல் வழங்கும் மையமாக இயங்கி வருகிறது. அங்கு சிகிச்சைக்கு சென்றால் திருவாரூர், தஞ்சாவூர் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று சொல்லும் நிலைமை உள்ளது. இந்த நிலையை மாற்றி அங்கு போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதையும் படிக்க: கேள்வி கேட்க எழுந்த செல்லூர் ராஜு... சபாநாயகரிடம் முறையிட்ட துரைமுருகன்.. பேரவையில் சிரிப்பலை
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாகப்பட்டினம் மருத்துவமனையில் அன்மையில்தான் புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனை திறந்துவைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை நிச்சயம் மேம்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.