Home /News /tamil-nadu /

கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் ஆன்லைன் குற்றங்கள் - 4 மாதங்களில் பதிவான 400 சைபர் கிரைம் வழக்குகள்!

கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் ஆன்லைன் குற்றங்கள் - 4 மாதங்களில் பதிவான 400 சைபர் கிரைம் வழக்குகள்!

மாதிரி படம்

மாதிரி படம்

Krishnagiri District: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவிற்கு பிறகு அதிகரிக்கும் ஆன்லைன் குற்றங்கள். நான்கே  மாதங்களில் பதிவான 400 சைபர் கிரைம்  வழக்குகள் . நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சி நடத்திய கள ஆய்வில் கிடைத்துள்ள பகீர் தகவல்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவிற்கு பிறகு அதிகரிக்கும் ஆன்லைன் குற்றங்கள். நான்கே  மாதங்களில் பதிவான 400 சைபர் கிரைம்  வழக்குகள். நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சி நடத்திய கள ஆய்வில் கிடைத்துள்ள பகீர் தகவல்கள்.

    தமிழ்நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா உச்சம் பெற்றது. அதனால் 2020 மார்ச் 7-ம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த நிலையில் அனைத்து வணிக நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிவோருக்கு (work from home) வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியது.

    இதனை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திய ஆன்லைன் மோசடி கும்பல் தினமும் 8 முதல் 12 மணி நேரம் ஆன்லைன் மூலமாக வேலை பார்க்கும் நபர்களை குறிவைத்து அவர்களுக்கு போலியான லிங்க் அனுப்புவது, போலியான வங்கி கடன் தருவதாக நம்பிக்கை கூறி விவரங்களை அவர்களது வெப்சைட்டில் பதிய வைத்து வங்கி கணக்குகளை திருடி பண மோசடி செய்வது,போலியான சமூக வளைதள பக்கங்களை கொண்டு ஆபாசமாக சித்தரிப்பது, ஆன்லைன் விளையாட்டில் மோசடி செய்வது போன்ற பலவிதமான வழிகளில் ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்ததால் ஊரடங்கு விளக்கிக்கொள்ளப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் வர்த்தகம் அதிகமானதால் இந்த ஆன்லைன் வர்த்தகம் கொரோனாவிற்கு பிறகும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    குறிப்பாக  பொருட்கள் வாங்குவது முதல் சாப்பாடு ஆர்டர் செய்வது வரை அனைத்திற்குமே  ஆன்லைன் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொழில் நகரமான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களிள் மட்டும் 400 குற்றங்கள் பதிவாகியுள்ளது என்பது பகீர் தகவலாக உள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரையில் தொழில் நகரமாகவும், கர்நாடக மாநிலம் அருகில் உள்ளதால் வளர்ந்து வரும் தொழில் மாவட்டமாகவும் உள்ளது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில்  வர்த்தங்கள் முடங்கிய நிலையில் அனைத்து வர்த்தகமும் ஆன்லைன் மூலமாகவே செய்யப்பட்டது.

    கொரோனாவிற்கு பிறகும் ஆன்லைன் வர்த்தகம் பயன்படுத்தப்பட்டு வருவதால் கொரானவிற்கு பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்துள்ளது. தொழில்வளம் மிகுந்த மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளதாலும் ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்துள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவிற்கு பிறகு கடந்த ஆண்டில் மட்டும்  962 சைபர் கிரைம் வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 2.49 கோடி ரூபாய் பணத்தை மக்கள் இழந்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு கடந்த நான்கே மாதங்களில் மட்டும் 400 வழக்குகள் பதிவாகியுள்ளது என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.

    கடந்த நான்கு மாதங்களில் பதிவான 400 வழக்குகளில் 2.85 கோடி பணத்தை மக்கள் இழந்துள்ளனர். இதில் 35.11 லட்சம் ரூபாய் மட்டுமே சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 11.23 லட்ச ரூபாய் முடக்கப்பட்டுள்ளது என்பதும் கூடுதல் தகவல். இந்த நிலையில் கொரோனாவிற்கு பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்துள்ளது என்ற பகீர் தகவல்கள் நியூஸ் 18 தமிழ்நாடு செய்திக்கு கிடைத்துள்ளது.

    குறிப்பாக இது போன்ற பண மோசடியில் ஈடுபடும் கும்பல் தினமும் புதுப்புது விதமான யுக்திகளை கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் போலியான வாடிக்கையாளர் சேவை மையம், ஆன்லைன் வேலைவாய்ப்பு, ஆன்லைன் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பு, வங்கி கணக்கு அப்டேட் குறுஞ் செய்திகள், ஆன்லைன் வங்கி கடன், விவரங்கள் பதிவு செய்தால் 5 நிமிடத்தில் வங்கி கடன், வாட்ஸ்அப் வீடியோ கால் அழைப்பு மோசடி, வெளிநாட்டில் இருந்து இலவச பரிசு பொருட்கள் தருவதாக மோசடி செய்தல், ஆன்லைன் விளையாட்டு மோசடி உள்ளிட்ட பல்வேறு வகையில் மோசடி கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது போன்ற மோசடியில் ஈடுபடும் கும்பல் எப்படி மோசடியில் ஈடுபடுகின்றனர்.

    போலி வாடிக்கையாளர் சேவைமைய பராமரிப்பு மோசடி

    வங்கி கார்டுகள் புதுபித்தல்,கூகுள் பே(google pay),போன் பே(phone pay), paytm போன்ற பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்களுக்கு கூகுளில் தேடும் பொழுது தவறுதலாக போலி வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு பேசி அதன் மூலம் விவரங்களை பதிவேற்றம் செய்வதன் மூலம் பண மோசடி செய்யப்படுகிறது.

    இது போன்ற மோசடியில் கடந்த  ஆண்டில் மட்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 167 பேர் பாதிக்கப்பட்டு 70 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்துள்ளனர். இது போன்ற மோசடியில் பாதிக்கப்படுபவர்கள் அதிகமாக படித்த நபர்களும், வங்கிக்கு செல்ல நேரம் கிடைக்காமல் வேலைக்கு செல்பவர்களும் தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

    மேலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் மோசடி கும்பல் கணிணியில் Any desk, QS App போன்ற ரிமோட் டெஸ்க் ஆப்-களை பதிவிறக்கம் செய்துவைத்து அதன்மூலம் நமது அனுமதி இல்லாமலேயே நம்முடைய கணினி, லேப்டாப் மற்றும் மொபைல்  உள்ளிட்டவைகளில் இருந்து விவரங்களை எடுத்து அதன்மூலம்  வங்கியின் விவரங்களை திருடி  பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆன்லைன் பகுதி நேர வேலை மற்றும் ஆன்லைன் முதலீட்டு மோசடி

    ஆன்லைன் பகுதி நேர வேலை வாய்ப்பு மற்றும் ஆன்லைனில் முதலீடு செய்தால் இரு மடங்கு லாபம் பெறலாம் என்னும் போலி விளம்பரங்கள் மூலம் மோசடி நடைபெறுகிறது. இது போன்ற புகார்களில் கடந்த ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  150 பேர் பாதிக்கப்பட்டு 35 லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளனர்.

    பெரும்பாலும் இந்த குற்றங்களில் ஆன்லைனில் வேலை தேடும் இளைஞர்களும், திருமணமாகி வீட்டில் உள்ள பெண்களும், வீட்டிலிருந்தே தினமும் சம்பாதிக்கலாம் என நினைத்து போலியாக வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை இழந்து  பாதிக்கப்படுகின்றனர்.

    KYC புதுபித்தல் தொடர்பான குறுஞ்செய்தி மூலம் மோசடி செய்தல்

    நமது மொபைல் எண்ணுக்கு போலியான மொபைல் எண்ணில் இருந்து ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு, ஏடிஎம் புதுபித்தல் போன்றவையில் இருந்து வரும் போலியான லிங்க்-ஐ கிளிக் செய்வதன் மூலம் நமது கைப்பேசியில் இருந்து விவரங்களை திருடி அதன் மூலமாகவும் மோசடி நடைபெறுகிறது.

    மேலும் இது போன்ற குற்றங்களில் அதிகமாக மாத வருமானம் பெரும்  ஊழியர்களும், பணி ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களே அதிமாக பாதிக்கப்படுகின்றர்.

    மேலும் இது போன்ற KYC அப்டேட் செய்வது போன்ற தகவல்கள் எந்த வங்கியில் இருந்தும் மொபைல் லிங்க் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அனுப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Also read... கோவையில் திமுக, மநீம கட்சி போஸ்டர்களில் இடம் பிடித்த பீஸ்ட் வசனம்

    ஆன்லைன் கடன் மோசடி

    ஆன்லைன் கடன் மோசடியில் அதிகமாக படித்தவர்களே பாதிப்படுகின்றனர். ஆன்லைனில் நமது விவரங்களை  பதிவேற்றம் செய்வதன் மூலம் குறைந்த வட்டிக்கு கடன் வழங்குவதாக வரும் போலியான செய்திகளை நம்பி கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 45 பேர் பாதிக்கப்பட்டு 30 லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளனர்.

    வாட்ஸ் அப் வீடியோ கால் மோசடி

    ஒருவரின் வாட்ஸ் அப் மொபைல் எண்ணிற்கு அடையாளம் தெரியாத  எண்களிலிருந்து வரும் வீடியோ கால் மூலமாக வரும் அழைப்புகளை ஏற்கும் பொழுது அதன்மூலம் நமது முகத்தை ஸ்கேனிங் செய்து வேறு ஒருவருடன் அந்த முகத்தை வைத்து ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டல். பணம் தரவில்லை என்றால் அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்று மிரட்டி பண மோசடியில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற மோசடியில் பெரும்பாலும் திருமணமாகாத ஆண்கள். பெண்கள் மற்றும் கல்லூரி படிக்கும் சிறுவயது இளைஞர்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

    வெளிநாட்டு பரிசு தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபடுவது

    அடையாளம் தெரியாத நபர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக நண்பர்களாக பழகி வெளிநாடுகளில் இருந்து விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் அனுப்புவதாக கூறி அந்தப் பரிசுப் பொருட்களை சுங்க அதிகாரி(customs officer) பிடித்து விட்டதாகவும் அதற்காக பணம் செலுத்தி அதனை பெற்றுக் கொள்ளுமாறும் கூறி அந்த நேரத்தில் அவர்களே வேறு குரலில் பேசி பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றுவது போன்ற மோசடியில் ஈடுபடுகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த வகையான மோசடியில் இதுவரையில் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிந்தாலும் 60 லட்சம் வரை பண மோசடி நடந்துள்ளது. இந்த வகையான மோசடியில் திருமணத்திற்கு வரன் தேடுவோர், மறுமணம் செய்வதற்காக காத்திருப்போர் முகநூலில் புதிய நண்பர்களை தேடுபவர்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரை சைபர் குற்றங்கள் அதிகரித்து வந்திருந்தாலும் இதுவரையில் 6 குற்றவாளிகள் மட்டுமே கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்து வருகின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

    இதற்கு காரணம் சைபர் குற்றவாளிகள் 95% வடமாநிலங்களில் (மும்பை, டெல்லி, ஜார்கண்ட், மகாராஸ்ட்ரா, உத்திர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் வசிப்பவர்களாக உள்ளதே முக்கிய காரணம்.

    கிருஷ்ணகி மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட 6 நபர்களில் ஒருவர் மட்டுமே தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சைபர் கிரைம் குற்றங்களில் பாதிக்கப்பட்டது அறிந்தால் பொது மக்கள் உடனடியாக காவல் துறையினரிடம் நேரில் சென்று புகார் அளிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் துணை காவல் கண்பாணிப்பாளர் சங்கு கூறியுள்ளார்.

    சைபர் கிரைம் துணை காவல் கண்பாணிப்பாளர் சங்கு


    மேலும் பொது மக்கள் இது போன்ற மோசடியில் பாதிக்கப்பட்டால் காவல் துறையின் 24 மணி நேர இலவச எண் 1930-க்கு தொடர்பு கொண்டோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் சென்று பொது மக்கள் தங்களின் புகார்கள அளிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

    " வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போல கெடும்" என்ற வள்ளூவரின் திருக்குறளுக்கு ஏற்ப எதையும் நடப்பதற்க்கு முன்பே தடுத்தால் மட்டுமே அதை தடுக்க முடியும் என்கிறார்.

    -செய்தியாளர்: குமரேசன்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Cyber crime, Krishnagiri

    அடுத்த செய்தி