• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு: அதிமுக, அமமுகவினர் மனுத்தாக்கல்!

வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு: அதிமுக, அமமுகவினர் மனுத்தாக்கல்!

வேட்புமனு தாக்கல் செய்யும் அமமுக வேட்பாளர்

வேட்புமனு தாக்கல் செய்யும் அமமுக வேட்பாளர்

தேர்தல் பணியில் 750 போலீசார் ஈடுபட்டுள்ள நிலையில், 3 கம்பெனி துணை ராணுவப் படையினர் இன்று தூத்துக்குடி வர உள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.  கடைசி நாளில் அதிமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

    தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ல் தேர்தல் நடந்தது. தொடர்ந்து மே 19-ம் தேதி 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை வரை மொத்தம் 98 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    அதில் 62 பேர் சுயேட்சைகள் ஆவர். திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்துவிட்ட நிலையில், திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் முனியாண்டி இன்று மனுதாக்கல் செய்தார்.

    முன்னதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், எம்.சி.சம்பத் மற்றும் பாஸ்கரன் புடைசூழ அவர் பேரணியாக அழைத்துச் செல்லப்பட்டார்.

    மே 19-ல் வாக்குப்பதிவு நடக்கும் ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் தொகுதியில் 71 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. கடைசி நாள் வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் 450 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தேர்தல் பணியில் 750 போலீசார் ஈடுபட்டுள்ள நிலையில், 3 கம்பெனி துணை ராணுவப் படையினர் இன்று தூத்துக்குடி வர உள்ளனர்.

    இதேபோல் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன் தனது மனுவினை தாக்கல் செய்தார். முதலில் உலகண்ட ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்த அவர், பின்னர் அமைச்சர்கள் காமராஜ், கடம்பூர் ராஜு, சேவூர் ராமச்சந்திரன், ராஜலட்சுமி உள்ளிட்டோருடன் திறந்த ஜீப்பில் ஊர்வலமாகச் சென்றார், மேளதாளத்துடன் ஆட்டம் பாட்டமாகச் சென்று மோகன் மனு தாக்கல் செய்தார். இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது வரும் 2-ம் தேதி பரிசீலனை நடைபெறுகிறது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: