கைப்பற்றப்பட்ட நான்கரை கிலோ தங்கத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் முன்னிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ரயில்வே காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி கேரளாவுக்கு எடுத்து செல்ல முன்ற நான்கரை கிலோ தங்கத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் வழக்கமான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 4 பேரைப் பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
அவர்களது இடுப்பில் நான்கரைக் கிலோ தங்க பிஸ்கட்டுகளை கட்டி இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து 4 பேரையும் ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் 4 பேரும், கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த லிக்கோ, சனில், புதுக்கோடு பகுதியைச் சேர்ந்த பிரகாசன், பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சத்யபாலன் ஆகியோர் என்பது தெரியவந்தது.
சென்னையில் ஒரு நகைக்கடையில் இருந்து தங்க பிஸ்கட்களை வாங்கிக் கொண்டு, அவைகளை நகைகளாக மாற்றி விற்க கேரளா செல்வதாகவும் அவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட நான்கரை கிலோ தங்கத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் முன்னிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ரயில்வே காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரும் முறையாக ஆவணங்கள் வைத்திருந்ததாகவும், நீண்ட தூரம் செல்லும் நகை வியாபாரிகள் உடலில் மறைமுகமாகத்தான் நகைகளை எடுத்துச் செல்வதுதான் வழக்கம் என வைரம் மற்றும் தங்க வியாபாரிகள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜெயந்திலால் ஜெலானி தெரிவித்துள்ளார்.
இதனிடையே சென்னை வால்டாக்ஸ் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை மடக்கி சோதனை செய்ததில் 17 கிலோ மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த யானைக்கவுனி போலீசார், அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது பொருட்களின் உரிமையாளரான லலித் என்பவர், தனது மனைவியின் மருத்துவ செலவுகளுக்காக வெள்ளி பொருட்களை தனது ஆடிட்டர் மூலம் சவுகார்பேட்டையில் விற்பனை செய்ய எடுத்துச்சென்றதாகக் கூறி, உரிய ஆவணங்களை போலீசாரிடம் வழங்கினார். இதையடுத்து 17 கிலோ வெள்ளி பொருட்களும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Also see... தொகுதி பங்கீடு வியூகத்தில் வல்லவர் யார்?
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.