35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட உள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு

தங்கம் தென்னரசு

தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் ஆக்சிஜனை மருத்துவ பயன்பாட்டிற்கு மாற்றுவது தொடர்பாகவும் தொழில் நிறுவனங்களுடன் பேசியுள்ளோம்.

  • Share this:
    வரும் 11ம் தேதி 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட உள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ள நிலையில், தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு என்ன தேவை என்பது குறித்தும் அவர்களுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் பாதிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரம்ணியன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, கூட்டத்தில் தொழில் நிறுவனங்கள், வணிக அமைப்புகள் ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அரசு தரப்பில் இருந்து கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    35 மெட்ரிக் டன் 11ஆம் தேதி ஸ்டெர்லைட்டில் இருந்து ஆக்சிஜன் வர உள்ளது. இதனை 70 மெட்ரிக் டன்னாக உயர்த்துவது தொடர்பாக 12 ஆம் தேதி பதில் அளிப்பதாக கூறியுள்ளனர். தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் ஆக்சிஜனை மருத்துவ பயன்பாட்டிற்கு மாற்றுவது தொடர்பாகவும் தொழில் நிறுவனங்களுடன் பேசியுள்ளோம். அதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனங்கள் கூறியுள்ளன.

    நாளொன்றுக்கு 419 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தற்போது தமிழகத்தில் பயன்பாட்டிற்கு தேவைப்படுகிறது. இது வரக்கூடிய நாட்களில் அதிகரிக்கும். இதற்காகத் தான் முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். வரக்கூடிய நாட்களில் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது.

    நமக்கு இருக்கக்கூடிய வசதிகளை வைத்து எங்கெல்லாம் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியுமோ அங்கெல்லாம் அதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: