• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • புதிய ஆயுதம்... ஒரு மாதத்தில் 3 முக்கிய கருவிகள் - திருச்சி படைக்கலத் தொழிற்சாலையில் தயாரிப்பு

புதிய ஆயுதம்... ஒரு மாதத்தில் 3 முக்கிய கருவிகள் - திருச்சி படைக்கலத் தொழிற்சாலையில் தயாரிப்பு

ராணுவ வீரர்

ராணுவ வீரர்

இந்த அதி நவீன துப்பாக்கி இரவிலும் எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட உள்நாட்டு உற்பத்தியாகும்.

  • Share this:
ஏ.கே 47 மற்றும் TAR துப்பாக்கிகளில் பயன்படுத்தும் புதிய ஆயுதம் உட்பட ஒரு மாதத்தில் 3 முக்கிய கருவிகளை திருச்சி படைக்கலத் தொழிற்சாலையில் (OFT) தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் நவல்பட்டு அருகே இந்திய பாதுகாப்புத்துறையின் படைக்கலத் தொழிற்சாலை (OFT) உள்ளது. இங்கு, ராணுவம், கடற்படை, எல்லைப் பாதுகாப்பு படைகளுக்கு தேவையான கருவிகள் குறிப்பாக துப்பாக்கிகளை தயாரித்து வருகின்றனர்.

ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் இஸ்ரேல் நாட்டு நிறுவனத்துடன் இணைந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் SRGC 12.7 mm என்கிற அதி நவீன துப்பாக்கியை கடலோர காவல் படைக்கு கடந்த 17ஆம் தேதி வழங்கினர். இரவிலும் எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட உள்நாட்டு உற்பத்தியாக இது சிறப்பு பெற்றது.

இதைத் தொடர்ந்து முப்படைகளுக்கும் பயன்படுத்தும் வகையில், ட்ரிகா (TriCa) 7.62x39 மி.மீ கார்பைன் ரக துப்பாக்கியை கடந்த 30ம் தேதி அறிமுகப்படுத்தினர். இது போர் விமானங்கள்,  ஹெலிகாப்டர்கள், பாராசூட்டுகள்,  காவல்துறை, விமான நிலையங்கள் மற்றும் சிறப்பு செயல்பாட்டு படைகள், முக்கியத்துவம் மிகுந்தகட்டிடத்தை பாதுகாக்கும் படை வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.



இது ஒப்பீட்டு அளவில் சக்தி வாய்ந்த தனிப்பட்ட தானியங்கி ஆயுதம் ஆகும். இந்த துப்பாக்கியில் சிறப்பு முகவாய் பூஸ்டர் உள்ளது. சுடும் போது ப்ளாசை மறைக்கவும், ஒலியை குறைக்கவும் உதவுகிறது. வழக்கமான இயந்திர துப்பாக்கியை விட நீண்ட தூரம் தாக்கும் திறன் கொண்டது.

Read more : திருச்சி ஓஃப்டியில் தயாரான ட்ரிகா ரக துப்பாக்கி - முப்படைகளுக்கான பிரத்யேக தயாரிப்பு

திருச்சி அசால்ட் ரைபிள் (TAR) மற்றும் ஏகே-47 உதிரி பாகங்களையும்  பயன்படுத்தலாம் என்று தெரிவித்தனர். இந்நிலையில், திருச்சி அசால்ட் ரைபிள் (TAR) & A.K 47 துப்பாக்கிகளில் பயன்படுத்தும் வகையில், UBGL (Under Barrel Grenade Launcher) 40×46 ரக ஆயுதத்தை தயாரித்து, தற்போது அறிமுகப்படுத்தியுள்ளனர். படைக்கலத் தொழிற்சாலையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையினால் 1.6 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. TAR & A.K 47 ரக துப்பாக்கிகளுடன் இணைத்து 400 மீட்டர் தூரம் வரை துல்லியமாக தாக்க முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பாக துப்பாக்கியுடன் இணைத்து பல்வேறு வகையான கையெறி குண்டுகளை வீச முடியும். துப்பாக்கி குண்டுகள், கையெறி குண்டுகள் என தொடர் தாக்குதலால் எதிரிகளை நிலைகுலையச் செய்து, இலக்குகளை அழிக்கலாம். இந்த ஆயுதத்தை ஒரு நிமிடத்திற்குள் துப்பாக்கியுடன் இணைக்கவும் பிரிக்கவும் முடியும். சிறப்பு வாய்ந்த இந்த ஆயுதம் பயங்கரவாதிகள் ஒழிப்பு படை உள்ளிட்ட சிறப்பு படைகளுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.



Must Read : ஆடிப் பெருக்கு... ஆளின்றி வெறிச்சோடி காணப்படும் திருச்சி காவிரி படித்துறை

தனிச்சிறப்பு பெற்றுள்ள இந்த ஆயுதத்தை திருச்சி படைக்கலத் தொழிற்சாலை பொது மேலாளர் சஞ்சய் திவேதி அறிமுகப்படுத்தினார். அறிமுக விழாவில், கூடுதல் பொது மேலாளர்கள் ராஜீவ் ஜெயின், ஏ கே சிங், இணை பொது மேலாளர்கள் குணசேகரன்,  கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், திருச்சி படைக்கலத் தொழிற்சாலையில் ஒரு மாதத்திற்குள் 3 முக்கியத்துவம் வாய்ந்த கருவிகளை தயாரித்து சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: