2கே கிட்ஸ் காதல் - மருமகளே வைரல் வீடியோ விவகாரம்.. சிறுமி வீட்டில் குழந்தைகள் ஆணையம் விசாரணை

Youtube Video

சமூக வளைதலங்களில் பிரபலமடையவேண்டும் என்ற நோக்கில் இன்ஸ்டாவில் பதிவிடப்பட்ட 2கே கிட்ஸ் வீடியோவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சிறார்கள் இருவரும் மன்னிப்பு கோரியுள்ள நிலையில், களமிறங்கியுள்ளார் குழந்தைகள் உரிமை அதிகாரிகள்.

 • Share this:
  சமீபத்தில் ஒரு 2K kids என்ற பெயரில், சிறுவனும் சிறுமியும், காதலிப்பது போன்றும், அதற்கு அவர்களின் பெற்றோர் ஆதரவு தெரிவிப்பது போன்றும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலான நிலையில், பலத்த எதிர்ப்பலைகளையும் ஏற்படுத்தியது.

  15 வயது நிரம்பாத சிறுவனும், சிறுமியும் காதலிப்பது போன்று பேசிக் கொள்ளும் இந்த வீடியோ காட்சிக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை சமூகவலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த வீடியோக்களை பார்க்கும் சிறுவர், சிறுமியர் தவறான உதாரணமாக எடுத்துக் கொள்ளும் அபாயம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டினர்.

  இந்நிலையில், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு கடலூர் பிரிவு அதிகாரிகள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளனர். வீடியோக்களின் ஐபி முகவரி மூலமாக சைபர் போலீசாரின் உதவியுடன் சிறுவர், சிறுமியர் இருக்கும் இடத்தை குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

  கடலூர் காவல் கண்காணிப்பாளர் உதவியுடன் சம்பந்தப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு சென்ற 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோரிடம் 3 மணி நேரமாக விசாரணை நடத்தியதுடன், அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினர். மேலும் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுவனின் தூண்டுதல் பேரிலேயே புகழ் பெறுவதற்காக இதை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

  Also Read : மொளைச்சி மூணு இலையே விடல, லவ்வு கேக்குதா - மருமகளே வீடியோவை வறுத்தெடுத்த ஜி.பி.முத்து

  வீடியோவில் வரும் சிறுமி பாதிப்பை உணர்ந்து, தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். சிறுமி மன்னிப்பு கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. அதை பலரும் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் சிறுவன் வீட்டிலும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் சென்று அறிவுரை வழங்கியுள்ளனர்.

  ஆன்லைன் மோகத்தில் அதிக லைக்குகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலும், பிரபலமாகலாம் என்ற ஆசையிலும் சிறுவர் சிறுமியர் இதுபோன்று வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனை பெற்றோர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இல்லையெனில் இதுபோன்று பாதிக்கப்படும் சிறுவர்-சிறுமியர்களை காப்பகத்திற்கு அழைத்துச் சென்று நல்வழிப்படுத்தவும் சட்ட வழிவகை உள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
  Published by:Vijay R
  First published: