சாதி மறுப்பு திருமணத்தால் பிரச்னை: 29 பட்டியலின குடும்பங்கள் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு

சாதி மறுப்பு திருமணத்தால் பிரச்னை: 29 பட்டியலின குடும்பங்கள் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு

பாதிக்கப்பட்ட மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கை திரும்ப பெறாததால் 29 பட்டியலின குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து, மளிகை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வழங்க மறுப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ளது உலகம் என்னும் கிராமம். இந்த கிராமத்தில் 29 பட்டியலின ஆதி - திராவிட குடும்பங்களும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 300 குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக சூர்ய கமார் என்னும் பட்டியலின இளைஞர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சரளா என்னும் 18 வயது வராத பெண்ணை காதலித்து இருவரும் சாதி மறுப்புதிருமணம் செய்துக்கொண்டுள்ளனர். திருமணத்தின் போது சரளா சிறுமியாக இருந்ததாக கூறப்படுகிறது.

  அன்று ஆத்திரமடைந்த பெண்ணின் வீட்டார் மற்றும் உறவினர்கள் அப்போதே, காலனி பகுதிக்குச் சென்று அத்துமீறி பட்டியலின இளைஞர்களையும் குடும்பத்தாரையும் சாதி ரீதியில் கடுமையான வார்த்தைகளால் பேசி பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

  இதனால் பட்டியலின குடும்பங்கள் சார்பில் சூளகிரி காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் கொடுத்ததாகவும், சரளாவின் குடும்பத்தார் சிறுமியை திருமணம் செய்ததாக எதிர் வழக்கும் தொடுத்துள்ளனர். பின்னர் கிராம பஞ்சாயத்தில் இரு தரப்பிலும் புகார்கள் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்ட நிலையில் சரளாவின் பெற்றோர் வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டதாகவும் ஆனால், பட்டியலின சமூக மக்கள் பலரும் காயப்பட்டிருந்ததால் வழக்கை வாபஸ் பெறாமல் வழக்கு இன்றளவும் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

  காதல் திருமணம் செய்தவர்கள்


  இந்தநிலையில் கடந்தவாரம் 30.09.2020 அன்று வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் முதல் விசாரணை நடைப்பெற்றதால் ஆத்திரமடைந்த சரளாவின் உறவினர்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை திரும்ப பெறும் வரை பட்டியலின குடும்பங்களுக்கு தோட்டங்களில் வேலையோ, கடைகளில் பால் முதல் எந்த பொருளையும் வழங்க கூடாதென உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் தற்போது பட்டியலின குடும்பத்தினர் கடைகளுக்கு சென்றால் உங்களுக்கு வழங்க கூடாதென தெரிவித்துள்ளனர்.


  அவ்வாறு உங்களிடம் பேசினால் 5,000 ரூபாய் அபராதம் விதிப்போம் என தெரிவித்திருப்பதால் தயவு செய்து வர வேண்டாமென அனுப்பி விடுவதாகவும் கேழ்வரகு அரவை மில், செல்ஃபோன் கடைகளிலும் கூட ரீசார்ஜ் செய்ய மறுப்பதால் மளிகை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் 5 நாட்களாக பல்வேறு சிக்கல்களையும் மனரீதியான பிரச்சனைகளும் சந்தித்து வருகிறோம். அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென 29 குடும்பங்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  Published by:Karthick S
  First published: