Home /News /tamil-nadu /

ஒமைக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : சென்னையில் 275 படுக்கைகள் தயார்

ஒமைக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : சென்னையில் 275 படுக்கைகள் தயார்

ஒமைக்ரான்

ஒமைக்ரான்

ஒமைக்ரான் தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில், தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    ஒமைக்ரான் வைரஸ் தொற்று தென்ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி, அச்சுறுத்தி வருகிறது. இது அதி தீவிரமாக பரவக் கூடியதாகவும், வீரியமிக்கதாகவும் கருதப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் 275 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களுக்குள் மருத்துவக் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், தமிழகத்தில் ஒமைக்ரானை எதிர்கொள்ளத் தேவையான மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், முககவசங்கள் போன்றவை அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகும் நபர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 150 படுக்கைள் ஒதுக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 4ஆவது தளத்தில் முதற்கட்டமாக 150 படுக்கைகள் தயார் செய்து ஒதுக்கப்பட்டுள்ளன.

    சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 75 படுக்கைகளும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 15 ஐ.சி.யு படுக்கைகள், 35 பொது படுக்கைகளும் என மொத்தமாக 275 படுக்கைகள் ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு தயார் செய்து வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், கிண்டி கொரோனா மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் ஒமைக்ரான் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தி கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, ஒமைக்ரான் தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில், தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பதை தவிர்க்கும் நோக்கில், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    அதிக பரவல் தன்மையையும், 30-க்கும் மேற்பட்ட திரிபுகளையும் கொண்ட ஒமைக்ரான், தற்போது வரை 24 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் கூறியுள்ளது. ஒமைக்ரான் திரிபு கண்டறியப்பட்ட பின்னர் தென் ஆப்ரிக்காவில், தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களில் 74 சதவிகிதம் பேருக்கு ஒமைக்ரான் திரிபு இருப்பதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனை தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தென் ஆப்ரிக்காவிற்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. இதனால் மீண்டும் பொருளாதார சுணக்கம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. விமான சேவைகளை முடக்குவதால் மட்டுமே, தொற்று பரவலை தடுத்து நிறுத்தி விட முடியாது என குறிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், அனைவருக்கும் தடுப்பூசி என்பதே தீர்வாக அமையும் என தெரிவித்துள்ளார்.

    Must Read : வங்கக் கடலில் உருவாகும் ஜவாத் புயல் எங்கே, எப்போது கரையை கடக்கும்?

    இந்நிலையில், தென் ஆப்ரிக்காவில் இருந்து கர்நாடகா திரும்பிய இருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 66 வயது ஆண் ஒருவருக்கும் 46 வயது ஆண் ஒருவருக்கும் தொற்று உறுதியானது. இந்நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: CoronaVirus, Ma subramanian, Omicron

    அடுத்த செய்தி