ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோயில்கள் நமது கலைச்சின்னங்கள்... சிற்பத்திறமைக்கான சாட்சியங்கள்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..

கோயில்கள் நமது கலைச்சின்னங்கள்... சிற்பத்திறமைக்கான சாட்சியங்கள்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

CM M.K.Stalin : இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2500 திருக்கோயில்களுக்கு ரூ.50 கோடி நிதி வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை வில்லிவாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் திருப்பணிகளுக்கு நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. அதில்,  1,250 கிராமப்புற கோயில்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியிலுள்ள 1,250 கோயில்களின் திருப்பணிக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,   “இந்து சமய அறநிலையதுறையின் சார்பில் 25 நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். இந்த வெற்றிக்கு காரணமான நம்முடைய செயல்பாபு என்று போற்றப்படக்கூடிய சேகர் பாபுவை நான் பாராட்டுகிறேன். அவர் நினைக்கலாம், என்ன, மூன்றாவது இடத்தில் தானே இருக்கிறோம், முதலிடத்திற்கு வரவேண்டுமே என்பதற்காக நாளையில் இருந்து வாராவாரம் தேதி கேட்டுவிடக் கூடாது.அதற்கு இப்போதே அவர் திட்டம் போட்டிருப்பார். அதுவும் எனக்கு நன்றாக தெரியும். அனைத்து துறையும் வளர்வதுதான் வளர வேண்டும் என்று எண்ணுவது தான் திராவிட மாடல் ஆட்சி என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

2,500 கிராமப்புற கோயில்கள் மற்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதி கோயில்களின் திருப்பணிக்குத் தலா 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கக்கூடிய விழா இது. 50 கோடி ரூபாய் நிதி வழங்கக்கூடிய நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக எழுச்சியோடு நம்முடைய ஆதீனங்களெல்லாம் பாராட்டக்கூடிய வகையில் இந்த நிகழச்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய மிக முக்கியமான ஆன்மிகப் பெரியவர்கள், அருள் நெறியாளர்கள் முன்னிலையில் இந்த கோயில்களுக்கான நிதியை அரசின் சார்பில் நாங்கள் வழங்கி இருக்கிறோம். நம்முடைய ஆட்சி மலர்ந்ததற்கு பிறகு திருக்கோயில்களுக்கு ஏராளமான பணிகள் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதனுடைய தொடர்ச்சியாகத்தான் இந்த விழா.

இந்த திருக்கோயில் பணிகளை பொறுத்தவரையில் சொல்ல வேண்டுமென்றால், நாங்களாக எதையும் செய்யவில்லை. இதற்கான வல்லுநர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வல்லுநர் குழுவின் ஆலோசனைப்படிதான் இதையெல்லாம் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 43,000 கோயில்கள் இருக்கின்றன. பழைய நிலையில் இருக்கக்கூடிய அந்தக் கோயில்களை புதுப்பிக்க, அப்படி புதுப்பிக்கும் நேரத்தில், பழமை மாறாமல் அதை சீர்செய்ய குடமுழுக்கு விழாவை நடத்த இந்த அரசு உத்தரவிட்டிருக்கிறது என்பதையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நவீன வசதிகள் கொண்ட அடிப்படைப் பணிகள் செய்து தரப்பட்டுள்ளன. திருக்கோயில் பணிகளை மேற்கொள்ள மண்டல, மாநில அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த குழுவினுடைய ஒப்புதல் பெற்ற பிறகுதான் இந்த செயல்பாடுகள் எல்லாம் செய்யப்படுகின்றன.தற்போது வரை 3986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்று சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்வதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

திருக்கோயில்களுக்கு சொந்தமான திருக்குளங்களைச் சீரமைக்கும் வகையில் கருத்துருக்களை வழங்குவதற்கு சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்டு 4 ஆலோசகர்களும், திருக்கோயில்களிலுள்ள பழமையான மூலிகை ஓவியங்களைப் பாதுகாக்கும் வகையிலான வழிமுறைகளை வழங்குவதற்குத் தனி ஆலோசகரும் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

2021-2022ம் ஆண்டில் வெளியிடப்பட்ட 112 அறிவிப்புகளில் 91 அறிவிப்புகளின் மூலமாக 3,769 திருக்கோயில்களில் திருப்பணிகளும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 1250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் மற்றும் 1250 கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணிகளையும் சேர்த்து இந்த நிதியாண்டில் மட்டும் 5078 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.அதைத்தான் நம்முடைய அரசு விரும்புகிறது, இதுதான் நம்முடைய அரசினுடைய நோக்கம். திருவாரூரில் பல்லாண்டு காலமாக ஓடாமல் இருந்த தேரை ஓட வைத்த பெருமை கலைஞருக்கு தான் சேரும். தேர் வரும் பாதையை சுற்றிலும் சாலைகள் அமைக்கப்பட்டன.

இதையும் படிங்க : பொங்கலுக்கு தேங்காய் கொடுங்க.. தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை

கோயில்கள் நமது கலைச்சின்னங்களாக, பண்பாட்டுச் சின்னங்களாக இருக்கின்றன. நமது சிற்பத்திறமைக்கான சாட்சியங்களாக இருக்கின்றன. நமது கலைத் திறமைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே, கண்ணும் கருத்துமாக அதைக் காப்பது நம்முடைய அரசினுடைய கடமை என்று எண்ணிச் இன்றைக்கு நாம் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். அத்தகைய கோயில்கள் சமத்துவம் உலவும் இடங்களாக அமைய வேண்டும் என்பதிலே நமது முழு கவனம் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது.

அன்னைத் தமிழ் மொழி ஆலயங்களில், நம்முடைய தமிழ் மொழி ஒலிக்க வேண்டும் என்ற உத்தரவையும் போட்டு இருக்கிறோம். சமூக சமத்துவம் கொண்டவைகளாக நமது ஆலயங்கள் திகழ வேண்டும்” என்று கூறினார்.

First published:

Tags: CM MK Stalin, Tamilnadu