உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கின்படி இந்தியாவில் 1 முதல் 19 வயது உடைய 24.1 கோடி குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு குடற்புழு தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சராசரியாக 1 முதல் 14 வயதுடைய குழந்தைகளில் 68% ஆகும். அதேபோல் உட்டச்சத்து குறைபாடு இரத்த சோகையாளும் இந்தியாவில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக 6 மாதம் முதல் 5 வயதுடைய குழந்தைகளில் 10-இல் 7 பேர் அதாவது 70% பேர் இரத்த சோகையினால் பாதிக்கப்படுகின்றனர். 15 முதல் 19 வயதினரிடையே 56% பெண்களும் 30% ஆண்களும் இரத்த சோகையினால் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல் 5 வயதுடைய குழந்தைகள் 50% பேர் உடல் வளர்ச்சி குன்றியும் 43% பேர் எடை குறைவாகவும் உள்ளனர்.
இதனை தடுக்கும்பொருட்டு சென்னை மாநகராட்சி சார்பில் 1 முதல் 19 வயதுடைய குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு வரும் 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதிவரை முதற்கட்டமாகவும் 21 (ம) 24 முதல் 26 வரை இரண்டாம் கட்டமாகவும் அல்பெண்டசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் இந்த மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன. முகாம் நாட்களில் விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 28-ஆம் தேதி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும் என சென்னை பெருநகர மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன் மூலம் சென்னையில் 16 லட்சத்து 60,000 பேர் பயன்பெறுவார்கள் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: மதிப்பெண் அட்டை என்பது குடும்பத்தினருக்கு கெளரவம்., மாணவர்களுக்கு மன அழுத்தம் - பிரதமர் மோடி
அல்பெண்டசோல் எனப்படும் இந்த மாத்திரைகள் எடுத்துக்கொள்வதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து பெற்றோர்களும் முகாம் நடைபெரும் நாட்களில் தவறாமல் தங்கள் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை பெற்றிட மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.