கிருஷ்ணகிரி மாவட்டம் கே.என்.தொட்டி ஊராட்சி மன்றத் தலைவராக 21 வயது கல்லூரி மாணவி சந்தியா வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக, உள்ளாட்சிப் பகுதிகளிலும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றுவருகிறது. ஊரக, உள்ளாட்சிப் பகுதிகளில் நடைபெற்றத் தேர்தலில் 80 வயது முதியவர், திருநங்கை, 21 வயது கல்லூரி மாணவி என பல்வேறு தரப்பினரும் வெற்றி பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கே.என்.தொட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி சந்தியா ராணி வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு, ஊர் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தேர்தலில் பெற்ற வெற்றி குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘அப்பா அம்மா உதவியில்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இளம் வயதில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம் என்று கருதுகிறேன். என்னுடைய பஞ்சாயத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்வேன். எங்களுடைய மக்கள் எண்ணத்தை வளப்படுத்த முயற்சி செய்வேன்.
அடுத்த தலைமுறையை முன்னேற்ற முயற்சி செய்வேன். வாக்கு சேகரிக்கும்போது எல்லாரும் அதிசயமாக பார்த்தார்கள். அப்பா நிறைய பேரின் பிரச்னைகளுக்கு உதவி செய்துள்ளார். அவர்களுடைய தேவைகளுக்கு நான் உதவுவேன் என்று நம்புகிறார்கள். கிராமத்தில் நிறைய பேர் குடிசை வீட்டில் வசித்துவருகின்றனர். அவர்கள் வீடு கட்டுவதற்கு முயற்சி செய்வேன். சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பேன். தற்போது பி.பி.ஏ இறுதி ஆண்டு படித்துவருகிறேன். அதனை முடித்த பிறகு, எம்.பி.ஏவை தொலைதூரக் கல்வி முறையில் படிப்பேன்’ என்று தெரிவித்தார்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.