ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியா?... “எங்கள் விருப்பம் இதுதான்”... அண்ணாமலை பளிச் பதில்!

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியா?... “எங்கள் விருப்பம் இதுதான்”... அண்ணாமலை பளிச் பதில்!

பிரதமர் மோடி - அண்ணாமலை

பிரதமர் மோடி - அண்ணாமலை

பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவதாக வெளியான தகவல் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைத்தாலும் கூட தமிழ்நாட்டில் அக்கட்சியால் பெரும்பான்மையுடன் வெற்றிபெற முடியவில்லை. 2014 மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதும் மோடி அலை வீச தமிழ்நாட்டில் தருமபுரி, கன்னியாகுமரி என 2 இடங்களையே கைப்பற்றியது பாஜக கூட்டணி. 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றாலும் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலில் மட்டும் 4 சட்டமன்ற இடங்களைக் கைப்பற்றியது. இந்த நிலையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான பூர்வாங்கப் பணிகளை அரசியல் கட்சிகள் இப்போதே தீவிரப்படுத்த ஆரம்பித்துவிட்டன.

2014, 2019 தேர்தல்களில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி வரும் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற கேள்வி தற்போதே எழ ஆரம்பித்துவிட்டது. கடந்த தேர்தலில் வட இந்தியாவின் ஆன்மீக தலமான வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர், இந்த தேர்தலில் தென்னிந்தியாவில் உள்ள ஆன்மீகத் தலமான ராமேஸ்வரம் உள்ள ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டது. செல்லும் இடங்களில் எல்லாம் தமிழ் பற்றி புகழும் பிரதமர், ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் தமிழ்நாட்டில் பாஜகவின் செல்வாக்கு அதிகரிக்கும் என்ற கணக்கு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “பிரதமர் போட்டியிட வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பதெல்லாம் இரண்டாவது பட்சம்தான். இதுதொடர்பாக பிரதமரோ, பாஜக தலைமையோ எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் தரவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் பிரதமர் போட்டியிட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்” என்று தெரிவித்தார்.

First published:

Tags: Annamalai, BJP, PM Modi