ஆங்கிலப் புத்தாண்டான 2023ஆம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையொட்டி தமிழகம் உள்பட உலகின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. தற்போது சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து வருகின்றன. புத்தாண்டையொட்டி கோயில், சர்ச் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மெரினா கடற்கரையில் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இங்கு 2 ஆண்டுகளுக்கு பின்னர் புத்தாண்டு கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டது.
முன்னதாக கடற்கரை பகுதியின் உள்ளே மக்கள் வெளியேற்றப்பட்டனர். இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இரவு 8 மணிக்கு மேல் மணல் பரப்பில் அமர்வதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. காமராஜர் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு பொதுமக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இங்கு வருவோர் வாகனங்களை அருகே நிறுத்துவதற்கு போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோன்று பட்டினப்பாக்கம், காசி மேடு, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு முழுமையாக அனுமதி அளிக்கப்பட்டதால் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். ஆரோவில், பாரடைஸ் உள்பட அனைத்து கடற்கரை பகுதிகளிலும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் களைகட்டியது. இதையொட்டி, நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
உலகிலேயே முதலாவதாக மத்திய பசுபிக் தீவு நாடான கிரிபாட்டியில் புத்தாண்டு பிறந்தது. மக்கள் வானவேடிக்கைகளுடன் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரிலும் புத்தாண்டு பிறந்தது. மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்தபடி உற்சாகமாக கொண்டாடினர்.
மேம்பாலங்கள் மூடல்; சாலைகளில் தடுப்புகள்... சென்னையில் தீவிர கட்டுப்பாடுகள்!
நியூசிலாந்தை தொடர்ந்து அமைந்துள்ள பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து, மியான்மர், வங்கதேசம், இலங்கையை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் புத்தாண்டு பிறந்துள்ளது.
இதையொட்டி பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. பொதுமக்கள் ஒருவருக்கொருவார் வாழ்த்து தெரிவித்தும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
கிரிபாட்டி தீவில் பிறந்தது ‘2023’ ஆங்கிலப் புத்தாண்டு : வாழ்த்துகளை பரிமாறி உற்சாகம்!
அமெரிக்கா அருகிலுள்ள மக்கள் வசிக்காத பேக்கர், ஹவுலாந்து தீவுகளில்தான் புத்தாண்டு கடைசியாக பிறக்கிறது. அங்கு இந்திய நேரப்படி ஜனவரி 1 மாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது.
இன்று புத்தாண்டு தினத்தையொட்டி தமிழகத்தில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாத் தலங்களில் கூடி புத்தாண்டை கொண்டாடவுள்ளனர். இதையொட்டி அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் ஏற்பாடுகளை செய்துள்ளன. வழிபாட்டுத் தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: New Year 2023, Tamil Nadu