Home /News /tamil-nadu /

2019-ல் தமிழகத்தை உலுக்கிய குற்றச் சம்பவங்கள்

2019-ல் தமிழகத்தை உலுக்கிய குற்றச் சம்பவங்கள்

2019ம் ஆண்டில் நடந்த பல குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் சில, தமிழகத்தையே உலுக்கியுள்ளன.

சந்தியா படுகொலை

திரைப்படங்களையும் மிஞ்சும் வகையில் சென்னையில் நடந்த சந்தியா படுகொலை, தமிழகத்தை உலுக்கிய கொலைகளில் முக்கியமானது. தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் எஸ்.ஆர்.பாலகிருஷ்ணன் - சந்தியா தம்பதி, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதி இடையே 20 வயது வித்தியாசம் இருந்தது. சினிமா மோகத்தில் சென்னை வந்த பாலகிருஷ்ணன், மனைவி சந்தியா பெயரில் தயாரி்ப்பு நிறுவனத்தை தொடங்கி, 2012ல், காதல் இலவசம் என்ற படத்தை தயாரித்து இயக்கினார். இந்த நிலையில் அதிக வயது வித்தியாசத்தால் கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டது. மனைவி மீது கொண்ட சந்தேகத்தால் வீடு முழுவதும் சிசிடிவிக்கள் பொருத்தும் நிலைக்கு சென்றார் பாலகிருஷ்ணன், தம்பதி இடையே மோதல் அதிகமாகியது, ஜனவரி 18ம் தேதி நடந்த சண்டையில் சுத்தியலால் சந்தியாவை அடித்துக் கொன்ற பாலகிருஷ்ணன், அவரது உடலை 7 துண்டுகளாக வெட்டி 3 கோணிப் பைகளில் கட்டி பெருங்குடி குப்பைக் கிடங்கு, அடையாற்றங்கரை மற்றும் சூளைப்பள்ளம் ஆகிய இடங்களில் வீசினார். சந்தியாவின் உடல் பாகங்களி்ல் இருந்த டாட்டூக்களை வைத்து பிப்ரவரி முதல் வாரத்தில் பாலகிருஷ்ணனை போலீசார் பிடித்தனர், வாக்குமூலத்தில் மனைவியைக் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார், பாலகிருஷ்ணன் தற்போது சிறையில் உள்ளார்

மாணவி பாலியல் பலாத்காரம்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த 15 வயது சிறுமி. 2018ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி 5 கி.மீ தொலைவில் உள்ள அரசுப் பள்ளிக்கு நடந்த சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை, போலீசார் இந்த வழக்கை கிடப்பில் போட்ட நிலையில், 5 மாதங்கள் கழித்து 2019 பிப்ரவரி 11ம் தேதி புதுகீச்சலம் கிராமத்தில், ஓடை ஒன்றில் மாணவியின் எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டது தமிழகத்தையே உலுக்கியது, போலீசாரின் விசாரணையில் மாணவியின் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான சங்கரையா பிடிபட்டார். மாணவியும் அவரும் காதலித்த நிலையில், பள்ளி செல்லும் வழியில், நாதமுனி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் உள்ள வீட்டில் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்தனர். இதைப் பார்த்த நாதமுனி, இளைஞர் சங்கரையாவிடம் 5000 ரூபாய் கொடுத்து மாணவியைத் தன்னிடம் விட்டு விடும்படி கூறினார். அதன்படி 2018, செப்டம்பர் 7ம் தேதி பள்ளி சென்ற மாணவியை தோப்பு வீட்டிற்கு அழைத்துச் சென்ற சங்கரையா, மாணவியுடன் உல்லாசமாக இருந்து விட்டு அவரை அங்கேயே விட்டுச் சென்றார், நாதமுனியும், அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தியும் மாணவிக்கு மது கொடுத்து 5 நாட்கள் கூட்டு வன்புணர்வு கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்தனர். இந்த வழக்கில் சங்கரையா, நாதமுனி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்

பொள்ளாச்சி பாலியல் பயங்கரம்

தமிழகத்தைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுதான் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், பிப்ரவரி 26ம் தேதி பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி ஒருவர் போலீசில் அளித்த புகார் மூலம் இந்த சம்பவம் அம்பலமானது, திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்த்குமார் ஆகிய இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவியர் மற்றும் இளம்பெண்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் நெருங்கிப் பழகியுள்ளனர். பின்னர் காதலிப்பது போல் நடித்து அவர்களை திருநாவுக்கரசின் பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இந்த வழக்கில் அடுத்தடுத்து ஆடியோக்கள், வீடியோக்கள் வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாக காவல்துறையை அணுகலாம் என அறிவித்தனர். எனினும் இதுவரை எந்த ஒரு பெண்ணும் புகார் அளித்ததாக போலீசார் தெரிவிக்கவில்லை. அரசியல் தளத்திலும் அதிர்வை ஏற்படுத்திய இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. கைதான நான்கு பேர் மீதான குண்டர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சிறுமி பாலியல் பலாத்காரம்

கோவை துடியலூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த தம்பதியின் மூத்த பெண் குழந்தைக்கு 6 வயது. 2019, மார்ச் 25ம் தேதி மாலை 6 மணியளவில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவி்ல்லை. மறுநாள், மார்ச் 26ம் தேதி அதிகாலையில் வீட்டருகே முகத்தில் டிஷர்ட் சுற்றப்பட்டு சடலமாகக் கிடந்தார் சிறுமி. அவரது உடலில் ரத்தக் காயங்கள் இருந்தன, அவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்ப்டடு கொலை செய்யப்பட்டதாக பின்னர் தெரியவந்தது. இந்த வழக்கில் ஆரம்பம் முதலே 4 பேர் மீது சந்தேகம் இருப்பதாக சிறுமியின் தாய் குற்றம்சாட்டினார். இந்நிலையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் போலீசாரிடம் சிக்கினார், போலீசாரின் தொடர் விசாரணையில் அவர் தான் சிறுமியைக் கொலை செய்ததாக உறுதியானது, இந்த வழக்கில் சந்தோஷ்குமாருக்கு துாக்குத் தண்டனை, ஆயுள் தண்டனை, 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது, இந்த நிலையில் டிஎன்ஏ அறிக்கையின்படி இந்த கொலையில் தொடர்புடைய இன்னொருவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது

குழந்தை விற்பனை

நாமக்கல் மாவட்டத்தில் பிஞ்சுக்குழந்தைகளை விற்பனை பொருளாக்கி பல லட்சங்களை சம்பாதித்த கும்பல் சிக்கிய சம்பவம், தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரசு செவிலியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அமுதவல்லி தலைமையில் இயங்கி்ய கும்பல் ஒன்று, குழந்தைப் பேறு வாய்க்காத தம்பதிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு பிஞ்சுக் குழந்தைகளை பல லட்சம் ரூபாய் விற்று வந்துள்ளது. இந்த வழக்கில் அமுதவல்லி, அவரது கணவர் ரவிச்சந்திரன், வாகன ஓட்டுனர் முருகேசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மலைவாழ் பழங்குடியின மக்களின் அறியாமையையும் வறுமையையும் பயன்படுத்தி இந்த குழந்தை விற்பனை பல ஆண்டுகளாக நடந்தது வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அரசு மருத்துவமனைகள், ஸ்கேன் மையங்கள் என தமிழகம் எங்கும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது

நெல்லை 3 பேர் படுகொலை

நெல்லையில் ஜூலை 22ம் தேதி பட்டப்பகலில் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், வீட்டுப் பணிப்பெண் மாரியம்மாள் ஆகிய 3 பேரும் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம், பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மதுரையைச் சேர்ந்த திமுக பிரமுகரான சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி ஆகியோர் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் திமுகவில் சீட் வாங்குவதற்காக உமாமகேஸ்வரியின் கணவர் முருக சங்கரனிடம் 50 லட்சம் ரூபாய் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சீட்டும் கிடைக்கவில்லை; பணமும் கிடைக்கவில்லை என்ற நிலையில் இந்த அரசியல் படுகொலைகள் நடந்ததாக விசாரணைக்குப் பிறகு போலீசார் தெரிவித்தனர். முதலில் இந்த வழக்கில் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர், பின்னர் சீனியம்மாளும், அவரது கணவர் சன்னாசியும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கையும் தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்

கொள்ளையர்களை விரட்டிய வீரத் தம்பதிகள்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் கிராமத்தில், பண்ணை வீட்டில் 70 வயதான சண்முகவேல், 60 வயதான செந்தாமரை தம்பதி, வசித்து வருகின்றனர். இவர்களது 2 மகன்களும் ஒரு மகளும் வெளியூரில் வசிக்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் தனியாக வசிப்பதை நோட்டமிட்ட இரண்டு கொள்ளையர்கள், ஆகஸ்ட் 11ம் தேதி இரவு முகமூடி, கையுறை அணிந்து கையில் அரிவாள் ஏந்தியபடி சண்முகவேல் வீட்டிற்குள் புகுந்தனர். நாற்காலியில் அமர்ந்திருந்த சண்முகவேலை பின்புறமாக அணுகிய ஒரு கொள்ளையன், அவருடைய முகத்தில் துணியை போட்டு மூடி இழுத்தார். நிலைகுலைந்த சண்முகவேல் கீழே சரிந்தார். அப்போது சப்தம் கேட்டு, வெளியேவந்த செந்தாமரை தனது கணவரின் நிலையைக்கண்டு கொந்தளித்தார். அங்கிருந்த பொருட்களை தூக்கி கொள்ளையர்கள் மீது எறிந்தார். ஒரு கட்டத்தில் சுதாரித்துக்கொண்டு எழுந்த சண்முகவேலும் தனது பங்கிற்கு நாற்காலி உள்ளிட்டவற்றை தூக்கி, கொள்ளையர்கள் மீது வீசி எறிந்தார். தம்பதியின் வீரத் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சங்கிலியைப் பறித்துக் கொண்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தின,. வீரத் தம்பதிகளுக்கு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விருது வழங்கி கவுரவித்தார். இந்த வழக்கில் 50 நாட்களுக்குப் பின் கொள்ளையர்கள் இருவரும் சிக்கினர்

லலிதா ஜுவல்லரி கொள்ளை

திருச்சி நகரின் மைய இடத்தில் 3 மாடிகளுடன் பிரமாண்டமாக நிற்கும் லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் 2019 அக்டோபர் 1ம் தேதி நள்ளிரவு புகுந்த மர்ம கும்பல் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, பிளாட்டின நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது. போலீசாரின் தீவிர தேடுதலில் பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன், அவரது மருமகன் சுரேஷ், கூட்டாளிகள் ராதாகிருஷ்ணன், கணேசன் ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர். காவிரி ஆற்றங்கரையி்ல் புதைத்து வைக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டன,. கொள்ளை,யும் குற்றவாளிகள் கைதும் சினிமா சம்பவங்களை மிஞ்சவதாக இருந்தன. இந்த கும்பல் தான் திருச்சியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்ததும் விசாரணையில் அம்பலமானது,. முருகன் கைதான பின் அவரைப் பற்றி நாளொரு கதையும் பொழுதொரு கற்பனையும் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் இருந்தன.

கல்கி பகவானுக்கு சோதனை

கல்கி பகவான் ஆசிரமத்தில் அதிகாரிகள் சோதனை நடத்திய போது, ஒரு சாமியாரிடம் இத்தனை கோடி சொத்துக்களா என்று தமிழகமே வாய் பிளந்தது, கல்கி பகவான், அவரது மனைவி அம்மா பகவான், இவர்களது மகன் கிருஷ்ணா ஆகியோர், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஒன்னெஸ் டெம்பிள் என்ற பெயரில் ராஜஸ்தான் பளிங்கு கற்களால் பிரமாண்ட தியான மண்டபத்தைக் கட்டியுள்ளனர், இந்த நிலையில் அக்டோபர் மாதம் கல்கி சாமியாரின் ஆசிரமங்கள், அலுவலகங்களில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனையில், ககணக்கில் வராத கட்டுக்கட்டான பணம், 26 கோடி ரூபாய் மதிப்புள்ள 88 கிலோ தங்கம், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.271 காரட் வைரம் ஆகியவை சிக்கின. 18 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டரை மில்லியன் அமெரிக்க டாலர் நோட்டுக்கள் சிக்கியதுதான் இந்த சோதனையின் அதிர்ச்சியான உச்சகட்டம். தியான வகுப்புகளுக்கு வசூலித்த பணத்திற்கு கணக்கு காட்டாதது, போலி ரசீதுகளின் அடிப்படையில் பணப்பரிவர்த்தனை என கல்கி சாமியார் குழுமம் சிக்கலில் சிக்கியது, சந்நியாசிகளை பினாமிகளாக்கி சம்பாதித்த 907 ஏக்கர் நிலங்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது

சுபஸ்ரீக்கு நேர்ந்த கொடூரம்

வேலைக்காக கனடாவுக்கு பறக்கும் கனவுடன் இருந்த 23 வயது சுபஸ்ரீ தற்போது உயிருடன் இல்லை. குடும்பத்திற்கு ஒரே பெண் என்பதால் செல்லமாக வளர்ந்த சுபஸ்ரீ, பிடெக் முடித்துவிட்டு, பெருங்குடியில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். எம்.டெக்கும் படித்து வந்தார். செப்டம்பர் 11ம் தேதி பல்லாவரம் ரேடியல் சாலையில், மாலை 5 மணிக்கு, தனது இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார் சுபஸ்ரீ. சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் கட்டப்பட்டிருந்த ஒரு பேனர் திடீரென அறுந்து விழுந்து, சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீியின் தலையில் விழுந்தது. அதிர்ச்சியில் சுபஸ்ரீ நிலைதடுமாறி வேகத்தை குறைத்த போது, பின்னால் பேய் வேகத்தில் வந்த தண்ணீர் லாரி மோதி அதன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது கொடூர மரணம், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால், 16 நாட்களுக்குப்பின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு விடுதியில் பதுங்கியிருந்த போது சிக்கினார், சுபஸ்ரீியின் மரணத்திற்குப் பின் சாலையில் பேனர்கள் வைப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன,.எனினும் அந்தக் கட்டுப்பாடுகளும் தற்போது காற்றில் பறக்கவிடப்படுகின்றன

கள்ளக்காதலனுக்கு கிடைத்த தண்டனை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த குருசாமி பாளையத்தில் நள்ளிரவு நிகழ்ந்த இரட்டைக் கொலைகளால் அப்பகுதி மக்களின் தூக்கம் தொலைந்தது... பணயக்கைதியான மூதாட்டி... ஆசிட் வீச்சு.. துப்பாக்கியுடன் குவிந்த போலீஸார் என சினிமாவையும் விஞ்சும் காட்சிகளால் அப்பகுதியே போர்க்களமானது. மூதாட்டி தனம்மாளின் மகள் விஜயலட்சுமி, 2 மகள்களுக்குத் தாயான அவர், ரவுடி சாமுவேலுடன் கள்ளக்காதலில் விழுந்தார். கள்ளக்காதலன் பேச்சை கே்ட்டு மகள்களையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தயாரானார், அதிர்ச்சியடைந்த மூதாட்டி தனம்மாள், பேத்திகளை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார். ஆத்திரமடைந்த சாமுவேல், டிசம்பர் 13ம் தேதி இரவு தனம்மாள் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் மூதாட்டியை கத்தி முனையில் சிறைபிடித்தார்,. சத்தம் கேட்டு பொதுமக்கள் குவியவே, மூதாட்டியை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்துக் கொலை செயய்த் தொடங்கினார், பொதுமக்கள் தாக்கிய போது ஆசிட்டை வீசி பீதி ஏற்படுத்தினார். மூதாட்டியைக் கொன்று விட்டு வீட்டை விட்டு வெளியில் வந்த சாமுவேல் அடித்துக் கொலை செய்யப்பட்டார். பேத்திகளுக்காக தன் உயிரை ஈந்த மூதாட்டி தனம்மாளை அப்பகுதி மக்கள் தெய்வமாகவே பார்க்கின்றனர்.

கைலாசா நாடு - கலக்கல் நித்தி

இந்த ஆண்டின் இறுதியில் வந்தாலும் இப்போது வரை தலைப்புச் செய்திகளில் இடம் பிடிப்பவர் நித்யானந்தா தான். அவரது தனிப்பட்ட செயலாளர் ஜனார்த்தனன் சர்மா, குஜராத் ஆசிரமத்தில் இருந்து தனது 2 மகள்களை மீட்டுத் தர வேண்டும் எனக் கோரி போலீசாரையும் நீதிமன்றத்தையும் அணுகிய போதுதான் நித்யானந்தா தொடர்பான சர்ச்சை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. எங்கிருக்கிறார் எனத் தெரியாத நிலையில், இணையதளத்திலேயே கைலாசா தனி நாடு அறிவித்து அனைவரது கவனத்தையும் திசை திருப்பினார் நித்யானந்தா. சட்டவிரோதமாக கட்டப்பட்ட குஜராத் ஆசிரமம் இடித்து தள்ளப்பட்ட நிலையில், ஜனார்த்தனன் சர்மாவின் இருமகள்களும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், பேஸ்புக்கில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். நித்யானந்தாவும் பேஸ்புக்கில் தினசரி சத்சங்கம் என்ற பெயரில் விவகாரங்களை திசை திருப்பி வருகிறார்,. நான் ஒரு புறம்போக்கு, பரதேசி, நோடு சூடு நோ சொரணை போன்ற பொன்மொழிகள் இந்த ஆண்டின் சிறந்த காமெடிகளாக வலம் வருகின்றன. கனடா நாட்டு சிஷ்யை, உள்ளூர் முன்னாள் ஆண் சீடர் என நித்யானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்குகள் குவிந்து வருகின்றன. தன்னையும் தனது சீடர்களையும் அழித்தொழிக்க மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் செயல்பட்டு வருவதாக ஐ.நாவின் மனித உரிமைகள் கமிஷனுக்கு அவர் கொடுத்த அறிக்கை, சலசலப்பை ஏற்படுத்தியது. பெங்களூரு பாலியல் வழக்கு மற்றும் குஜராத் ஆசிரம வழக்கில், அவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் விடுவதற்கு மத்திய அரசு முனைந்துள்ள வேளையில், இப்போது வரை நித்யானந்தா தினசரி புதுப்புது வேடங்களில் ஆசியுரைகளை வழங்கிக் கொண்டு, தைரியமாக இருப்பது எப்படி என சீடர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

 
Published by:Yuvaraj V
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், YearEnder 2019

அடுத்த செய்தி