வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்றவர்களில் 3 ஆண்டுகளில் 200 தமிழர்கள் உயிரிழப்பு

விமானம்

தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்றவர்களில் 3 ஆண்டுகளில் 200 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

 • Share this:
  வெளிநாடு வாழ் தமிழர்கள் நல ஆணையரகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2016-ம் ஆண்டு முதல் 2019 வரையிலான மூன்று ஆண்டுகளில், வெளிநாடுகளுக்கு சென்ற தமிழர்கள் 200 பேரின் உடல்கள் தமிழ்நாட்டுக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2016 - 17ம் ஆண்டில் 48 உடல்களும், 2017 - 18ம் ஆண்டில், 75 உடல்களும், 2018 - 19ம் ஆண்டில் 77 உடல்களும் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை மரணம் மற்றும் தற்கொலை என பல்வேறு காரணங்களுக்காக இந்த இறப்புகள் நிகழ்ந்ததாகவும் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

  அதேவேளையில் 2012 முதல் 2019 வரையிலான ஏழு ஆண்டுகளில் மொத்தம் ஆயிரத்து 468 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2014- 15ம் ஆண்டில், வெளிநாடுகளில் இருந்து 428 தமிழர்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பஹ்ரைன் அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் கண்ணன், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் தமிழர்கள், முறையான முகவர்கள் மற்றும் சரியான விசா இல்லாமல் செல்லும்போது பணியிடத்தில் ஏதேனும் இன்னல் ஏற்பட்டால் உரிய உதவியை பெற முடிவதில்லை என்று கவலை தெரிவித்தார். எனவே, தவறான முகவர்களை நம்பி ஏமாறாமல், அந்தந்த நாடுகளில் உள்ள தமிழ் சமூகத்தை தொடர்புகொண்டு உண்மை நிலவரத்தை கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.

  இதேபோல, கருத்து தெரிவித்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் பேராசிரியர் பெர்னார்ட். டி சாமி, சரியான விசா இல்லாமல் செல்லும்போது உரிய காப்பீடு எதுவும் கிடைக்காது என்று தெரிவித்தார். இயற்கை மரணங்களுக்கு காப்பீட்டுத் தொகை ஏதும் வழங்க வேண்டிய அவசியமில்லை என்பதால், வேலையின் போது இறந்தாலும் மாரடைப்பு உள்ளிட்ட இயற்கை காரணங்களால் இறந்ததாக தெரிவிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  Also Read : அதிகரிக்கும் கொரோனா... கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

  சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இந்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, அதன் மூலம் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பெர்னார்ட் டி சாமி வலியுறுத்தினார்.

  பணிக்கு செல்லும் நாட்டில் இந்திய தூதரகத்தின் முகவரி மற்றும் தொடர்பு எண்ணை தெரிந்து கொள்வது அவசியம் என்று வெளிநாடு வாழ் தமிழர்கள் நல ஆணையரகம் வலியுறுத்துகிறது. வெளிநாடு செல்பவர்கள் 044- 2851 5288, 90425 52514 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும்,  nrtchennai@tn.gov.in மற்றும் nrtchennai@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் உதவி பெறலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: