பழனி அருகே பெரிய கருப்பணசாமி கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, 200 கிடாய்கள் வெட்டப்பட்டு, பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கோம்பைப்பட்டி கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பெரியதுரையான் கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது.
பழமையான இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடத்தப்படும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். மேலும், பக்தர்களால் வழங்கப்பட்ட 200 ஆட்டு கிடாய்கள், கருப்பணசாமிக்கு பலிகொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இருபதுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் இணைந்து பெரிய அளவிலான பாத்திரங்களை வைத்து அசைவ உணவை தயார் செய்தனர். பின்னர் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில், சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் கலந்துகொண்டனர்.
பெரிய துரையான் கோயிலில் கிடாய் வெட்டி பூஜை செய்வதால், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்றும், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-செய்தியாளர்: அங்குபாபு.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.