சென்னையில் 200 மாநகரப் பேருந்துகள் இயக்கம்

கோப்பு படம்

சென்னையில் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்காக 200 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 • Share this:
  கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் 14 நாட்கள் தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து பேருந்துகள் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

  இந்நிலையில் அத்தியவாசியப் பணிகளான மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பால் மற்றும் அரசின் முக்கிய துறைகளில் குறைந்த அளவில் பணியாற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அரசின் பல்வேறு துறை சார்ந்தவர்கள் பணிக்கு வருகின்ற வகையில் சென்னையில் முக்கிய வழித்தடங்களில் 200 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

  தலைமை செயலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சென்னை பெருநகர் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் அரசு விதித்துள்ள நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  முழு ஊரடங்கின் போது எவை இயங்கும்?

  அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.

  காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள், நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும்.

  நியாய விலைக் கடைகள் காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை செயல்படும்.

  தன்னார்வலர்கள் வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், நோயுற்றவர்களுக்கான சேவை வழங்குபவர்கள் தொடர்புடைய நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை / ஆவணங்களுடன் சென்று வர அனுமதிக்கப்படுகிறது.

  உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. சாலையோர உணவகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

  நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள்.

  நடைபெற்றுவரும் கட்டடப் பணிகள் அனுமதிக்கப்படும்.

  ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம்.

  திருமணம் / திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்துகொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 20 நபர்களுக்கு மிகாமல்) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும், அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையுமில்லை.

  தொலைத்தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்.

  தரவு மையங்களில் பராமரிப்பு பணி, மருத்துவம், நிதி, வங்கி, போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்கு தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு சார்ந்த பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

  கிடங்குகளில், சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது மற்றும் சரக்குகளை சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

  முழு ஊரடங்கின் போது செயல்பட அனுமதிக்கப்படாத தொழில் நிறுவனங்களில், தீ, இயந்திரம் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

  முழு ஊரடங்கின் போது, இரயில் நிலையங்களிலும், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும், சரக்கு போக்குவரத்திற்கும், தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதிக்கப்படும்.

  பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

  வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீடு நிறுவன சேவைகள் அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும்.

  இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் அக்கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

  எவை இயங்காது?

  மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயான தனியார், அரசு பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கும், மருத்துவமனை செல்வதற்கும் உரிய ஆவணங்களுடன் பயணிப்பவர்கள் அனுமதிக்கப்படுவர். இதை தவிர வேறு எந்த போக்குவரத்தும் செயல்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

  தமிழகத்தில் முழு ஊரடங்கின்போது டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: