20 ஆண்டுகால பழிவாங்கும் வெறி தீர்ந்தது... சென்னையில் பிரபல ரவுடி படுகொலை

Youtube Video

சென்னையில் 20 ஆண்டுகளுக்கு முன், அதிமுக பேச்சாளர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், பழிக்குப் பழி வாங்க காத்திருந்த அவரது மகன் ரவுடியை வெட்டிக் கொலை செய்திருக்கிறார்.

 • Share this:
  சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சிவகுமார், இவர் மீது 4 கொலை வழக்குகள் உட்பட கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் என 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. சிவக்குமாருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சூர்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

  அதன் பின்னர் வழக்கு ஒன்றிற்காக தேடப்பட்டு வந்த நிலையில், 2020ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி உத்திரமேரூரில் தனது சகோதரி வீட்டில் தலைமறைவாக இருந்த பொழுது போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவரிடமிருந்து பல்வேறு பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன

  இந்த நிலையில் ஜாமினில் வெளிவந்த ரவுடி சிவக்குமார் சென்னை அசோக் நகர் போஸ்டல் காலனி 2வது தெருவில் அலுவலகம் வைத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜஸ்டின் என்பவருக்கு குறைந்த காலகட்டத்தில் 10 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார்.

  வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு அந்தக் கடன் தொகையை வாங்குவதற்காக ஜஸ்டினின் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் அவரைப் பின்தொடர்ந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், ஜஸ்டினின் அலுவலகத்தில் வைத்து முகத்திலும் தலையிலும் சரமாரியாக வெட்டி முற்றிலுமாக சிதைத்து விட்டு தப்பியோடி விட்டனர்.

  ரத்த வெள்ளத்தில் விழுந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த அசோக்நகர் போலீசார் சிவகுமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில், குற்றவாளிகள் சம்பவ இடத்திற்கு வருவதும் பின்னர் தப்பிச் செல்வதுமான காட்சிகள் பதிவாகியிருந்தன.

  இதற்கிடையே, பிரபல ரவுடி சிவக்குமாரை படுகொலை செய்ததாக திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 23 வயதான பாலாஜி, 22 வயதான அழகுராஜ், மயிலாப்பூரைச் சேர்ந்த 45 வயதான பாண்டியன், டிபி சத்திரத்தைச் சேர்ந்த 30 வயதான ரோகித்ராஜ், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 20 வயதான விஷ்ணு ஆகியோர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மாலை சரணடைந்தனர்.

  முதற்கட்ட விசாரணையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படுகொலைக்குப் பழிக்குப் பழி வாங்கவே சிவக்குமார் கொலை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. மயிலாப்பூரைச் சேர்ந்த தோட்டம் சேகர் என்பவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவின் பேச்சாளராக இருந்தார். அவரை ரவுடி சிவக்குமார் தலைமையிலான கும்பல் அப்போது படுகொலை செய்தது.

  அதற்குப் பழிக்குப் பழி வாங்க, சேகரின் மகன்கள், அழகுராஜ், பாலாஜி இருவரும் திட்டம் தீட்டி படுகொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். தனது தந்தை படுகொலை செய்யப்பட்டபோது, தனக்கு 2 வயது என்றும் அதற்காகவே 20 ஆண்டுகள் காத்திருந்து சிவக்குமாரைப் படுகொலை செய்ததாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

  தோட்டம் சேகரைக் கொன்ற வழக்கில் திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் காங்கிரஸ் பகுதிச் செயலாளராக இருந்த அப்பாஸ் என்பவருக்கும் தொடர்பிருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், 2018ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி, தோட்டம் சேகரின் மகனான அழகுராஜ் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அப்பாசை நடு சாலையில் ஆள்நடமாட்டம் இருந்தபோது வெட்டிப் படுகொலை செய்தார்.

  அப்பாசின் ஆதரவாளரான ஷேக் என்பவர் அதற்குப் பழிவாங்க திட்டமிட்டார்.

  2019ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி, அழகுராஜ் மற்றும் அவரது தாய் மலர்க்கொடி ஆகியோர் ஒரு வழக்கிற்காக எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு அண்ணாசாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஷேக் உள்ளிட்ட 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும் கத்தியால் தாக்கியும் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  அதே போல தற்போது கொலை செய்யப்பட்ட ரவுடி சிவக்குமார், சென்னை காவல்துறையினர் கணக்கெடுத்து வெளியிட்ட ரவுடிகளின் பட்டியலில் மிகமுக்கியமான ரவுடியாக இடம்பெற்றிருந்தவர் என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது. 20 ஆண்டுகளுக்கு முன்பு செய்த கொலைக்கு பழி வாங்குவதற்காக நடத்தப்பட்ட கொலையானது சென்னையில் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் படிக்க... தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக நல்ல முடிவை அறிவிக்கும்: ஜிகே வாசன்

  தனது தந்தையைக் கொன்ற ரவுடியை 20 ஆண்டுகள் காத்திருந்து மகன்கள் படுகொலை செய்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: